பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/420

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழனத்தை, தமிழ் சமுதாயத்தை வளர்த்து வாழவைக்கும் எந்த ஒரு கருத்தையும் அது எப்பொழுது தோன்றியதாயினும், எங்கே பிறந்ததாயினும் எதன் பெயரில் பிறந்ததாயினும் அறிஞர் அண்ணா தாராளமாக ஏற்றுக் கொள்கிறார்.

நம்முடைய சமுதாயத்துக்குத் துணை செய்யாததும், துணை செய்யாததோடு மட்டுமன்றி, ஊரும் கறையான் மரத்தை அரிப்பது போலவும், என்புருக்கி போலவும் நம்முடைய சமுதாய முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள எந்த ஒரு கருத்தையும் காலம், களம், இடம் பாராமல் உறுதியுடன் எதிர்க்கின்றார்.

சமூக அநீதிகளோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பாதவர். ஆதலால் வாழ்க்கைக்கு உதவாத பழமைக்கு, அவர் பகைவரேயாம். வாழ்க்கையை அறிவாலும் ஆர்வத்தாலும் திறனறிந்த உழைப்பாலும் தூண்டி வளர்க்கும் எந்த ஒரு கருத்துக்கும் அறிஞர் அண்ணா ஒரு கொழு கொம்பாவார்.

அறிஞர் அண்ணா ஒரு சிந்தனையாளர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளர்; செயல் தொண்டர். அவருடைய இலக்கியப் படைப்பு மரத்துப்போன பழைமைக்குக் கல்லறையாகும்; பூத்து வரும் புதுமைக்குப் பூங்காவாகும்.

அவர் இலக்கியத் துறையிலும் சாதாரண மக்கள் பக்கத்திலேயே நின்றார். அவர் காப்பியங்கள் செய்யவில்லை; தோத்திரங்கள் செய்யவில்லை; துதி நூல்கள் செய்யவில்லை.

எளிய நடையில் அன்றாடப் பிரச்சனைகளை எழுதுகிறார்; கதையாக எழுதுகிறார்; கடிதமாக எழுதுகிறார்; கட்டுரையாக எழுதுகிறார்.

அண்ணாவின் படைப்பில் அன்றாடப் பிரச்சனை தானா? அன்றாடம் என்பது தனித்து நிற்பதில்லையே! அன்றாடத்திலேயே நேற்றும் உண்டு. நாளையும் உண்டு. அவர் தம் மனோ நிகழ்ச்சிகளை - அதாவது நேற்று, இன்று