பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/422

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"ஆடம்பரத்திலும் வெளி வேஷத்திலும் இவ்வளவு சுலபத்திலே ஏமாந்து போகும் இந்த மக்களைக் கொண்டு எப்படி சமூகப் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்க முடியும்?” என்று பார்வதி ஏக்கம் கொண்டாள்.

சமூகத்தில் பல வேடிக்கை மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழில் இல்லை. அவர்களுடைய வயிறு வளர்வது பலருடைய அறியாமையிலேயே. ஆனாலும் ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை. அவர்கள் மரியாதைக்கு மரியாதை தரமாட்டார்கள். அவர்கள் மரியாதைக்கு மிரட்டையும், மிரட்டுக்கு மரியாதையும் தருவார்கள்.

ஐயோ, பாவம்! இப்படி நாம் அன்றாடம் பலரைச் சந்திக்கிறோம். இத்தகையவர்களைச் சந்தித்தவுடன், அண்ணாவின் படைப்பாகிய 'பெங்களூர் அம்பக் ஆறுமுகம்' இவர்தானோ என்று கருதும்படி இருக்கிறது. அவ்வளவு அற்புதமாகச் சித்தரிக்கிறார்.

சென்ற பல நூற்றாண்டுகளைவிட இந்த நூற்றாண்டு பெருமையும் புகழும் பெற வேண்டுமென்ற வேட்கை மலிந்து வளர்ந்துள்ள காலம். பலர் பஞ்சாங்கம் பார்ப்பதை மறந்து விட்டனர்.

ஆனால், பத்திரிகைகளில் பெயர் வருகிறதா? என்று பார்க்கத் தொடங்கி விட்டனர். வரவில்லையானால் ஏக்கம்! பெருமூச்சு! அத்தகையவர்களுக்கு 'பெங்களூர் அம்பக் ஆறுமுகம்' போன்றவர்களின் விளம்பர கமிஷன் ஏஜெண்டுகளின் மாநாடுகள் கூடுகின்றன.

யார் பெயரால்? தொழிலாளர்களின் பெயரால்! கூடுவது யார்? மச்சு வீட்டுக்காரர்கள்! பேசுவது யார்? “எல்லோருக்கும் கஷ்டமிருக்கிறது; சகித்துக் கொள்ளுங்கள்” என்று புது கார் வாங்க முடியாததை பிலாக்கணமாகப் பாடும் செல்வர்கள்!

இவர்களுக்குத் தாராளமாக 'அம்பக் ஆறுமுகம்' என்பவர் 'இரட்சகன்' என்ற பட்டத்தை வாரி வழங்குகிறார்.