பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டும். ஒரு சிறு துளியாகக் கவலை வந்தாலும் அதனை வரவேற்கக் கூடாது. கவலை, சென்ற கால நிகழ்வுகளை வாயிலாகக் கொண்டு வரும்; சென்ற கால நிகழ்வுகளை எண்ணி வருந்தும்படி கற்றுக் கொடுக்கும், வீழ்ந்து விடுதல் பெரிய துன்பமன்று. இழப்பையும் கூட அவ்வளவு பெரிதாகத் தந்துவிடாது. ஆனால், வீழ்ந்ததைப் பற்றி எண்ணிக் கவலைப் படுதல் வீழ்ச்சியைப் பலவாக்கும்; ஆக்கத்தின் வாயில்களைத் தூர்த்து விடும்; சோர்வே மிஞ்சும்; பிழைப்பறியா நிலையில் கணியனை நாடச் சொல்லும், அவன், தன் வாயில் வந்தபடியெல்லாம் சொல்லி வைப்பான். இந்த வாழ்க்கை விரும்பத்தக்கதன்று. இகழ்ச்சி நிறைந்த வாழ்க்கையினை, அறிவும் ஆண்மையும் உழைப்பும் இல்லாத வாழ்க்கையினை நச்சுதல் கலியுகத்து இயற்கை. ஆனால், இது வாழும் வழியன்று. இதனை பாரதி,

"புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக்கு இனிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர, -இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி"

என்று குறிப்பிடுகின்றான்.

இத்தகு கலியுகத்தைத் தூரத் தள்ளி வைத்துவிட்டு, கிருதயுகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றான் பாரதி. கலியுகம், நம்மைச் சமுதாயத்திலிருந்து விலக்கியது; தன்னயப்பையே வளர்த்தது; “எனக்குத்தான் எல்லாம்” என்ற உணர்வையே வளர்த்தது. இதனால் எண்ணத் தொலையாத ஏற்றத் தாழ்வுகள்! எளிதில் தீர்வுகாண முடியாத மனிதச் சிக்கல்கள்! கலியுகத்தின் ஆட்சி நடப்பதற்குரிய களம் எது? "நான்", "எனது” என்ற சொற்களும், அவ்வழி தோன்றி வளரும் தனியுடைமைச் சமுதாயமும், தன்னிச்சைப் போக்கும், சமுதாயச் சார்பில்லாத வாழ்க்கையுமேயாம். இவற்றை அறிந்து மாற்றினால் கிருதயுகம் பிறந்துவிடும்.