பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/434

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்ந்தவர்; நெறியில் நீங்கியோரின் ஏச்சில் வளர்ந்தவர்; பெருநெறி விலகிய பேதையர் பேச்சைக் கடந்து வந்தவர்.

பொது வாழ்க்கையை அறிஞர் அண்ணா மலராலாய மஞ்சம் எனக் கருதவில்லை. அது துன்பம் நிறைந்தது: இடையூறுகள் நிறைந்தது என்று எடுத்துக் காட்டிப் பொது வாழ்க்கையின் வெற்றிக்குரிய சக்தியைப் பெறத்தூண்டுகிறார்; ஓடாது நிற்கச் சொல்லுகிறார்; எதிர்த்துச் செல்ல தூண்டுகிறார்; போராடி வெற்றி பெற வற்புறுத்துகிறார்.

தேனீக்களைப் போல பிறருக்கென சுற்றித் திரிந்து உழைக்கச் சொல்லுகிறார். பொது வாழ்க்கைக்குத் தன்னலம் - தன்னலச் சபலம் கேடு என்று சொல்லுகிறார். சபலத்தைக் கடந்து, சஞ்சலத்தைக் கடந்து பொது வாழ்க்கையில் ஈடுபட கற்றுத் தருகிறார்.

அறிஞர் அண்ணா சிறந்த இலக்கியப் படைப்பாளர். மிகச் சிறந்த மனிதப் பண்புகளை இலக்கியத்தில் படைத்துக் காட்டுகிறார். ஆனால் அதே காலத்தில் அவர் தன்னுடைய இலட்சியங்களையே, இலக்கியங்களாகப் படைக்கிறார் என்பதையும் அவருடைய ஆர்வ உணர்வுகளே அன்னை மொழியாம் அமுதத் தமிழில் எழில் உருவம் பெற்று வெளிவருகின்றன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

அவர் தமது இலட்சியங்களை, தனது இலக்கியத்தில் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தனது தம்பிகளின் வாழ்க்கையிலும் தனது ஈடு இணையற்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள் வாழ்க்கையிலும் உருவாக்கத் துடிதுடிக்கிறார்; உருவாக்குகிறார். ஏன்? உருவாக்கியும் உள்ளார். என்பதை எண்ணிப் பார்க்கும்போது, திருவள்ளுவரின் படைப்புக்குத் தனது வாழ்க்கையின் மூலம் உரை காண வந்த தோன்றலோ அறிஞர் அண்ணா என்று கருத வேண்டியுள்ளது.