பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/438

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கலக்கின்றன. ஆனால், தனி மனிதனோ சமுதாயம் என்ற பெருங்கடலில் கலப்பதில்லை. உயர்வும் தாழ்வும் வளர்க்கின்றான் என்று பாடுகின்றார்.

“உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது
ஒற்றுமையில்லா மனித குலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது”

என்று பாடுகிறார்.

மூங்கில் குத்திலே மூங்கில்கள் வளர்கின்றன. ஓங்கி வளர்கின்றன. ஒன்றையொன்று தழுவி வளர்கின்றன என்று எடுத்துக்காட்டி, மனித குலத்தோடு ஒட்டாமல் ஒதுங்கியிருந்தால் உயர முடியுமா? என்று கேட்கிறார். மேலும் ஒருபடி மேலே சென்று, ஒற்றுமையில்லாது போனால் உயர முடியாதது மட்டுமின்றி, வளர்ச்சியும் கெடும் என்றும் உணர்த்துகிறார். கவிதையில் சிறந்த உவமை நயம் இருப்பது படித்து இன்புறத்தக்கது.

“ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்னையொன்னு புடிச்சிருக்கு
ஒழுங்காகக் குருத்துவிட்டு
கெளை கெளையா வெடிச்சிருக்கு
ஒட்டாமே ஒதுங்கிநின்னால் உயரமுடியுமா?-எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?”

என்ற பாடற்பகுதி இனிமை வாய்ந்ததாகும்.

ஒரு சிறந்த கவிஞன் தனக்கு முன்னே வாழ்ந்த கவிஞர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு நயம்படத் தன் மொழியில் வழிமொழிந்து பேசுதல் இயல்பு. இவரிடம் இத்தகு ஆற்றல் அமைந்திருப்பதைப் பல்வேறிடங்களில் காண முடிகிறது.