பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கவிதையில் அழகாக விளக்குகிறார். இக்கருத்தை விளக்குவதோடு மட்டுமின்றி, இவ்வுலகில், நன்மை செய்வோர் அல்லற்படுவதையும் அக்கிரமங்கள் செய்வோர் வாழ்க்கையை அனுபவிப்பதையும் இடித்துக் காட்டுகிறார். கவிஞர், "ஏமாறமாட்டோம்” என்ற தற்காப்புணர்ச்சியை மட்டும் ஊட்டவில்லை. இந்த உணர்வு பெரும்பான்மை யோரிடத்தில் இயல்பாகவே இருக்கிறது. தன் வாழ்க்கையில் ஏமாற விரும்பாதவர்கள் பலர் பிறரை ஏமாற்ற விரும்புகின்றனர். கவிஞர்,

"ஏமாற்றவும் மாட்டோம் - நாம்
ஏமாறவும் மாட்டோம்”

என்று பாடுவது புதிய மரபு. முதலில் சமுதாயத்தில் வளர வேண்டிய ஒழுக்கம் ஏமாற்றமாட்டோம் என்பதேயாகும்.அதுவளர்ந்து விட்டாலேயே ஏமாறுதல் இவ்வையத்தில் இருக்காது. இக்கருத்தை வலியுறுத்தும் கவிஞரின் மனப்போக்கில், ஒழுக்கத்தை வற்புறுத்துவதோடு மட்டுமின்றி,அவ்வொழுக்கத்தைத் தூண்டி வளர்க்கக்கூடிய சமுதாயச் சூழ்நிலை இருக்கவேண்டும் என்று கருதுவதையும் வெளிப்படுத்துகின்றார்.

எரிகின்ற நெருப்பில் விறகுகள் அகப்பட்டு அழிவது போல, மனிதன் தன்னலத்தில் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறான். தன்னலத்தின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகச் சில பொழுது தோற்றத்தால் அறம் போலக் காட்டும் சில காரியங்களையும் செய்வான். ஆனால் உள்நோக்கம் வேறு. உள்நோக்கத்தை அறிகின்ற பொழுது விலாவறச் சிரிக்கத் தோன்றும். இவ்வாழ்க்கையே இப்படியென்றால், இக்கவிஞருடைய கவிதையாற்றலால் வேதனை கலந்த வியப்புணர்ச்சி மிகுகிறது. "இரைபோடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடே! இதுதான் உலகம்! வீண் அனுதாபம் கண்டு நீ ஒருநாளும் நம்பிடாதே" என்கிறார்.