பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/450

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது கவிதை. ஆம்! இன்று பலருக்கு நல்ல இடம் கிடைத்தாலும் அங்குச் சேரமாட்டார்கள்; ஒட்ட மாட்டார்கள். எங்காவது சுற்றிக் கொண்டிருப்பர். அல்லது முச்சந்திகளில் குற்றங்களின் களமாகிய கடைகளில் இருப்பர். ஏன்? அவர்கள் சேர்ந்த இடம் நல்ல இடம்தான். பல பெரியவர்களிடம் நட்பும் உறவும் சேர்க்கும் இடம்தான். நாலு பேருக்கு உதவி செய்யக்கூடிய இடம்தான். ஆனால், அதன் அருமையை அவர்கள் உணர்வதில்லை. ஐயோ பாவம்! வந்து சேர்ந்த இடம் நல்ல இடம்தான்; சிறந்த இடம்தான் என்பதை உணர்த்தும் அன்பில்லை.

பட்டுக்கோட்டை தனித்தன்மையுடைய கவிஞன். சமுதாயத்திற்காகவே பாடிய கவிஞன். இருளில் பிறந்து தட்டுத் தடுமாறி, பொழுது விடியப் பாடினான். நாமாவது பட்டுக்கோட்டையின் கனவை நனவாக்கிப் பொழுதை விடியச் செய்வோமாக.