பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/469

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது!
ஒற்றுமை யில்லா மனிதகுலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது!"
(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 18)

என்று மிகவும் அழகாக உணர்த்துகின்றார். மானிட சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து, ஒட்டி உறவாடி வாழ்ந்தால்தான் வளரலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒதுக்குதல் ஒதுங்குதல் என்ற கொள்கை அறவே கூடாது. மானிடத்தோடு ஒட்டி வளர்ந்தாலே உயர ம்; உயர முடியும். இந்த அழகிய கருத்தினை மூங்கில்கள் மூலம், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை விளக்கிக் கூறும் பாடல் இதோ:

"ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்னை ஒன்னு புடிச்சிருக்கு!
ஒழுங்காகக் குருத்து விட்டு
கொள்ளை கொள்ளையா வெடிச்சிருக்கு!
ஒட்டாமே ஒதுங்கி நின்னால்
உயர முடியுமா? - எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா
வளர முடியுமா?"
(பட்டுக்கோட்டை பாடல்கள் பக், 19)

இனிய அன்பர்களே! பட்டுக்கோட்டையின் பாடல், அனுபல்லவி போன்ற பாடலாகும், ஏனெனில், இதற்கு முன்பு, இதுபற்றி நமக்கு எடுத்துக் கூறியவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள்! அவர்கள் கூறியவற்றை நாம் செவி மடுக்கவே இல்லை! இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குச் சாதியை, சாதிக் கலவரங்களைக் காப்பாற்றப் போகிறீர்கள்! இது என்ன நாம் செய்த ஊழா? அல்லது மற்றவர்கள் செய்த கர்ம வினைதான். இவ்விதம் வந்து மூண்டிருக்கிறதா?

கு.V1.30.