பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/470

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஆறு! ஆற்றோட்டத்தின் ஒதுக்குப்புறத்தில் சிறு குழிகள்! அச்சிறிய குழிகளில் ஆற்று வெள்ளத்தோடு வரும் மாசுகள் அடையும்! இந்த உவமை, பாரதியின் உவமை. பாஞ்சாலி சபதத்தில் பாரதி எடுத்தாளும் உவமை.

ஆம்! பாண்டவர்களின் துன்பத்திற்கு அவர்களின் ஊழ் காரணமன்று. சகுனி, துரியோதனன் முதலியோருடைய கர்மப்பயன் பாண்டவர்களை வந்து வருத்துகிறது. காரணம், ஒரு நாடு, ஒரு சமூகம் ஆகிய அமைதியேயாம்! இன்றும் நம்மில் பலரை - ஏன்? கோடானுகோடி மக்களை ஏழ்மையிலும் அறியாமையிலும் கிடத்தித் துன்புறுத்துவது அவர்களுடைய ஊழ் அன்று.

இந்த நாட்டை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கின்ற அரசுகள், முதலாளித்துவத்திற்குக் கட்டியம் கூறும் மதத் தலைவர்கள் முதலியோர் செய்த தீயூழே இன்றைய ஏழை மக்களை வருத்துகிறது. இதற்குப் பெயர் "சமூக ஊழ்”

அன்று சிலப்பதிகாரக் கண்ணகியை வருத்தியது பூம்புகார்ச் சமுதாயத்தின் சமூக ஊழ். பாரதியின் "பாஞ்சாலி சபத"த்தில் ஒரு பாடல். கேளுங்கள்!

"..........

வைய மீதுள வாகும் அவற்றுள்
விதியினும் பெரிய தோர்பொரு ளுண்டோ?
மேலை நாம் செய்யும் கர்மம்அல் லாதே
நதியில் உள்ள சிறுகுழி தன்னில்
நான்கு திக்கி லிருந்தும் பல்மாசு
பதியு மாறு பிறர் செய்யும் கர்மப்
பயனும் நம்மை அடைவதுண் டன்றோ?”

(பாஞ்சாலி சபதம் பக். 407)

ஆதலால், தனித்து வாழ்ந்தால் உயர்ந்துவிடலாம் என்று எண்ணாதீர்கள்! நீங்கள் வாழும் சமுதாயத்தையும்