பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

39


கூட விடுவாள்! இது கலியுகப் பெண்ணின் பத்தினித் தன்மை. ஒருபால் கோடிய அநியாயம் இதினினும் வேறுண்டோ ? ஆனால், கிருதயுகத்துப் பெண், கற்புக்குப் புது இலக்கணம் வகுக்கின்றாள். இல்லை; அவள் ஆடவனுக்கும் கற்பு கூறுகின்றாள். இதோ, கிருதயுகப் பெண் என்ன கூறுகிறாள்? கேளுங்கள்!

"கற்புநிலை யென்று சொல்ல வந்தார்-இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!
(பெண்கள் விடுதலைக் கும்மி-5)

இது மட்டுமா, பெண்ணின் விடுதலை? இல்லை, இல்லை! மாட்டைப் பூட்டிக் கொடுத்தல்போலப் பெண்ணைக் கட்டிக் கொடுத்தல் என்பது கலியுக வழக்கு, இந்த மூடப் பழக்கத்தை பாரதியின் கிருதயுகப் பெண் மறுக்கின்றாள். பெண், தான் விரும்பியவனை மணக்க உரிமையுடையவள். காதல் ஒருவனைக் கைப்பிடிக்க அவளுக்கு உரிமை உண்டு.

"வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”

என்று பாரதியின் கிருதயுகப் பெண் முழக்கம் செய்கின்றாள். கிருத யுகத்துப் பெண் அடங்கிக் கிடந்த ஆற்றலென வெளிக் கிளம்புகின்றாள், இன்று பட்டங்கள் ஆள்கின்றாள்; சட்டங்கள் செய்கின்றாள். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று, பாரதியின் கிருதயுகப் பெண் ஆர்ப்பரிக்கின்றாள்.

பாரதி, கலியுகத்தை-கலியைக் கொல்ல நினைக்கின்றான்; கிருதயுகத்தைப் படைக்கவும் நினைக்கின்றான். ஆயினும், பொதுவுடைமைச் சமுதாயத் தத்துவத்தைக் கண்ட மார்க்சினிடமிருந்து பாரதி: மாறுபடுகின்றான், கலியுக கொடுமைகளுக்குக் கடவுள் காரணமல்ல என்று. கருது