பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

49


படைக்கும் சக்திகளாகத் தாம் வளர்க்கும் பாரதக் குழந்தைகளைப் பயிற்றுவிக்க புதிய ஆத்திசூடி செய்கின்றான். இந்தக் கலியுக சமுதாயத்தில் மரத்துப்போன குழந்தைகளைப் பார்த்து "ரௌத்திரம் பழகு” என்று கோபத்தைக் கற்றுக் கொள்ளும்படி சொல்கின்றான். சமூகத்தின் தீயசக்திகளாக விளங்கும் தீயமனிதர்களைப் பார்த்துச் "சீறுக” என்கின்றான். “சீறுவோர்ச் சீறு” என்பது பாரதியின் வாக்கு. இதையே விரித்து பாப்பாப் பாட்டிலும் பாடுகின்றான், கலியுகத்தின் ஔவைப் பாட்டி தீயோரைக் கண்டால் விலகு என்றாள். தீயோரைக் கண்டு விலகினால் தீமை போய் விடுமா? தீயோர்க்கு உரிய தண்டனை தராமல் - தப்பிக்கச் செய்துவிட்டால் தீயோர் எண்ணிக்கை ஒன்று, இரண்டு என்று கூடிப்போனால் என்ன செய்வது? தீயவர் எண்ணிக்கை கூடிப்போன பிறகு, எங்கு ஒதுங்குவது? அது மட்டுமா? தீயவர்கள் ஒதுங்கிப் போவதை நாகரிகம் என்று கருத மாட்டார்களே! அதனால் பாரதி. தீமையை எதிர்த்து நிற்கத் தூண்டிப் பழக்குகின்றான். "பாதகம் செய்பவரைப் பார்த்தால் விட்டு விடாதே பாப்பா! தாவிப் பிடி! பிடித்து மோது! மோதி மிதி! மிதித்ததோடு மட்டுமின்றி அவர் முகத்தில் காறி உமிழ்ந்துவிடு” என்று பாப்பாவுக்குப் பயிற்சி தருகின்றான் பாரதி.

"பாதகம் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ள வாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
(பாப்பாப் பாட்டு-8)

கலியுகம் என்பது உழைக்காமல் உண்ணும் வாழ்க் கையைச் சிறப்புடையது என்று கருதுவது. கலியுக ஆவணங்களில் உழைக்காமல் உண்ணும் வசதி வாய்ப்புப் பெற்றவர்களின் தொழிலைக் குறிக்கும் பொழுது "சுக ஜீவனம்” என்று எழுதுவது மரபாக இருந்தது. அது