பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கையை மூடத்தனத்தால் கெடுக்காமல் வளர்ப்பர்; வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நம்பிக்கையைக் கொடுப்பர்; ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையை எப்படிப் பெரிதென நினைக்கிறார்களோ அதைவிட ஒரு மடங்கு கூடவே மற்றவர் நலனைப் பெரிதாகப் போற்றுவர். இதுவே பாரதியின் கிருதயுக இலட்சியம்.

"சாதிகள் சேருது: சண்டைகள் தொலையுது
...........................
தரித்திரம் போகுது செல்வம் வருது:
படிப்பு வளருது பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான் ஐயோவென்று போவான்”

பாரதி வேதம், சாத்திரம், சூத்திரம், மந்திரம் என்ற சொற்களிலே வெறுப்புக் கொண்டவனல்லன். கலியுகத்தில் இவை பயன்பட்ட வகையிலே தான் பாரதிக்குக் கோபம். வேதத்தின் பெயரால் வேற்றுமைகள் வளர்ந்தன. சாத்திரத்தின் பெயரால் சதிகள் நடந்தன. மந்திரங்கள் என்ற பெயரால் மாய்மாலங்கள் நடந்தன. இவைகளை பாரதி அடியோடு வெறுத்தான். இவை கலியுகத்தின் புன்மைகள் என்று போக்க நினைத்தான். அதே பொழுது வேதங்களும் சாத்திரங்களும் மந்திரங்களும் இல்லாமல் கிருதயுகத்தை ஆக்கவும் விரும்பவில்லை. இவைகளை நாட்டு மக்களுக்குரியவாறு, பயன் படுத்த நினைத்துத் திட்டமிடுகிறான். மந்திரங்களால் மட்டும் சமுதாயம் வளர்ந்து விடாது. தந்திரமும் வேண்டும். தந்திரம் என்பது இன்றைய உலக வழக்கில் வழங்குவது போல் கொச்சைத்தனமானதன்று. இன்று பெரும்பாலும் தந்திரம் என்பது ஏமாற்றுவது என்ற கொள்கையிலேயே வழங்கப்படு கிறது. ஆனால் தந்திரத்தின் நோக்கம் அதுவன்று. மிகப் பெரிய அரசியலோடு தந்திரம் என்ற சொல் பிணைக்கப் பெற்று "இராஜ தந்திரம்" என்று வழங்கப் பெறுகிறது. மிகப்