பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

55


என்று வலியுறுத்தினான். இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் இந்த அரிய பண்பு வளராமல் போய்விடவில்லை. ஆனாலும் இந்த சன்மார்க்க நெறி அணி வலிமை பெறவில்லை. இன்றும் மத மாற்றங்கள் மதச் சண்டைகள் முதலிய வீணான வேலைகளில் சிலர் ஈடுபடுவது பாரதிக்கு உடன்பாடன்று. நாட்டின் நன்மைக்கும் ஏற்றதன்று. நாட்டின் மதச் சார்பற்ற தன்மை குடிமக்களின் ஒழுக்கமாக இடம் பெறவேண்டும். நான் கடவுளைத் தொழுகிறேன். நான் பலனை அடைகிறேன். கடவுளைத் தொழாமல் கடவுளே இல்லையென்பவனோடு எனக்கேன் சண்டை? நான் என்ன கடவுளைக் காப்பாற்றப் பிறந்தேனா? இல்லை கடவுள்தான் என்னைப் போன்றவர்களால் காப்பாற்றப்படுகிற அளவுக்கு பலமற்றவனா? அதுபோலவே கடவுள் உண்டு என்கிற நான் தொழுகிறேன். கடவுளே இல்லையென்று சொல்லி என் நம்பிக்கையைச் சிதற அடிப்பானேன்? கடவுள் நம்பிக்கையை மறுப்பது என்பது வேறு. கடவுள் நம்பிக்கையால் நடக்கும் சமூகப் படுகொலைகளை மறுப்பது என்பது வேறு? என்ற நியாயங்கள் தெரிந்ததாக வேண்டும். அது போலவே யார்; எப்பெயரில் எந்த உருவத்தில் தொழுதாலும் கடவுள் ஒன்றே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகும் வரை மதத்தால் மக்களுக்குப் பயன் ஏற்படாது. இதனை பாரதி,

"தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் ஏசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்."

என்று கூறுகின்றான்.