பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

61


போட்டுக் கொண்டதாகப் புராணங்கள் செய்து பிழைப்பு நடத்தியவர்கள், நடத்துகிறவர்கள் வாழும் நாடு இது. கடவுள்கள் பலவென்று ஆகி இந்தக் கடவுள் அந்தக் கடவுள் என்று கடவுள்களின் சக்தி பற்றிய சர்ச்சை; இந்த சர்ச்சைச் சந்தடியில் கடவுளேகூடத் தன்னை மறைத்துக் கொண்டு விட்டார். மதவேற்றுமைகளைப் பேணிவளர்த்து மனித குலத்தை அழிக்க மத நிறுவனங்கள் தோன்றிவிட்டன. புரோகிதர்கள் பெருகிவிட்டனர். இவர்களுக்குக் கடவுளைப் பற்றியும் கவலையில்லை! மனிதகுலத்தைப் பற்றியும் கவலையில்லை! ஆதலால், வேற்றுமைகள் பல்கிப் பெருகித் தெருவுக்குத் தெரு கோயில்-கடவுள்விழா என்கிற பெயரில் மனிதன் நிர்வாண விளம்பரப் பண்டமாகிக் கெட்டொழி கின்றான். இந்த மூல நோய்க்குப் பாரதி முதல் மருத்துவம் செய்கிறான். சாதியைப் பார்க்காதே! கேட்காதே! சாதி முறைகளுக்கு உடன்படாதே! இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு குலம்! ஓரினம்! புகழும் பெருமையும் அனைவருக்கும் உண்டு. சாதி, மத வேற்றுமைகள் என்கிற தீமை பெற்றெடுத்த தீமை அழுக்காறு, ஒருவர் உயர்ந்தால் மற்றவர் பொறார். பொறாமையால் சாதியைக் காட்டி, ஊரைக் கூட்டிப் பழிப்பர்! இத்தகு சூழ்நிலையில் தகுதி பெற்றவரும் அத்தகுதி தமக்கே உரியது என்றும் சமுதாயத்திற்கு அதில் என்ன பங்கு இருக்கிறது என்றும் பாதுகாப்பு உணர்வால் தருக்கி நடக்கத் தலைப்படுவர். இதன் விளைவாகத் 'தகுதி' 'பதவி' என்பனவற்றிற்கு யாரும் உரியரல்லாமல் இழப்பர்; அடிமைகளாவர்; அல்லற்படுவர். அதனால் பதவியும் தகுதியும் தனிமனிதருக்குரியனவல்ல. சமுதாயத்திற்குரியன. வாழ்வும் வீழ்ச்சியும் தனி மனிதர்களைச் சார்ந்தவையல்ல. சமுதாயத்தைச் சார்ந்தவை. இந்தப் புத்திசாலித்தனம் வந்துவிட்டால், பொதுமை உணர்வு தோன்றி விட்டால் பாரத சமுதாயம் விடுதலை பெற்றுவிடும். இது பாரதியின் நம்பிக்கை.