பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

63


கட்டும் தளம் இருக்கிறது. பாரதம் சொந்தக் கப்பல்களைக் கட்டுகிறது.

வீதிகள் தோறும் பள்ளிகள் தேவை. ஆனால், பள்ளிகள் புத்தகப் புழுக்களை, ஒப்புவிக்கும் எந்திரங்களை, குமாஸ்தாக்களை, தேடித் திரியும் தன்னம்பிக்கையில்லாதவர்களை உற்பத்தி செய்து அனுப்பி என்ன பயன்? கல்வி கற்றவர்கள் உயிருணர்ச்சி உடையவர்களாக, எழுச்சியுடையவர்களாக விளங்க வேண்டும். இத்தகைய ஆற்றலை சமய வாழ்க்கையால், கடவுள் வழிபாட்டால் தான் பெறமுடியும் என்பதை, பாரதி உணர்ந்து, "பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடுகின்றான்.

சிங்களத் தீவாகிய இலங்கை, நமது நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த உறவை மேலும் வளர்ப்பது பாரதியின் நோக்கம், ஆதலால் எளிதில் பயணம் செய்ய பாலம் அமைக்க ஆசைப்படுகின்றான். இஃது இதுவரை நடைபெறவில்லை. இனி எதிர் வரும் காலத்தில் நடக்காமற் போகாது. அடுத்து சேது என்பது தென் கடற்கரையிலிருந்த ஓர் ஊர்ப்பகுதி. இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்ற ஊரருகில் இருந்த ஊர், இந்த ஊரைக் கடல் கொண்டுவிட்டது. இராமன் இலங்கைக்கு அணைகட்டிச் சென்ற இடம் இது. பழைமை போற்றும் நெறியிலும் புதுமை படைக்கும் முனைப்பிலும் "சேதுவை மேடுறுத்தி விதி சமைக்க"த் திட்டம் தந்தான். நடுவண் அரசு இத்திட்டத்தை ஆராய்ந்தது; எடுத்துக் கொண்டிருந்தது; பின் கைவிட்டு விட்டது. ஏன்? என்பது புரியவில்லை. சேதுத் திட்டத்தைப் பாரதியின் நினைவாக வற்புறுத்த வேண்டும்.

பாரதியின் அடுத்த திட்டம் மிக மிக முக்கியமானது. இத்திட்டத்தைத் தந்ததின் மூலம் பாரதி எவ்வளவு பெரிய அறிஞன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. காதலையும், வீரத்தையும், கடவுளையும், அரசனையும் மட்டும் பாடிக்