பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திற்குத் தேவையாக இருந்தது. வளத்தைச் சுரண்டுவதற்காக மட்டுமல்ல, இங்கிலாந்தின் பொருள்களுக்கு ஒரு விற்பனைச் சந்தை தேவை என்பதும் ஆகும். ஆதலால், இங்கிலாந்து என்ற ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி இந்த நாடு தொழிலில் சிறந்து விளங்கவேண்டும்; அன்னியப் பொருள்களின்றி இந்தியா வாழக்கூடிய பலத்தினைப் பெற வேண்டும். இது பாரதியின் கனவு. பெரிய பெரிய ஆலைகளை அமைக்க வேண்டும்; தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும். பஞ்சினில், பட்டினில் ஆடைகள் உற்பத்தி செய்ய வேண்டும். ஆயுதங்கள் செய்ய வேண்டும். ஆம்! உற்பத்திக்குப் பயன்படும் கருவிகள் செய்ய வேண்டும். மீண்டும் கூறுவான், "உழு படைகள் செய்வோம்" என்று! போருக்குப் பயன்படும் ஆயுதமும் செய்ய வேண்டும். ஏகாதிபத்திய வல்லரசுகளின் கொட்டம் இன்னமும் அடங்கிய பாடில்லை. இந்து மா கடலில் அமைதியில்லை. நமது நாடே படை வலிமையுடையதாக இருப்பது வலியச் சென்று போர் செய்ய அல்ல. தற்காப்புக்குத் தான்! விசாகையில் கட்டுமானம் ஆகும் கப்பல்களும், ஆவடியில் உற்பத்தியாகும் விமானங்களும், திருச்சி-திருவெறும்பூரில் உற்பத்தியாகும் துப்பாக்கிகளும் பாரதி நினைத்த தொழிற் புரட்சியின் மையங்கள்! பாரதத்தை வலிவும், பொலிவும் உடையதாக்கும் சக்திகள்!

பாரதி, அடிமையாக-ஏழையாகப் பிறந்தான். அடிமையாக-ஏழையாகச் செத்தான். ஆயினும், பாரதி குடிசைத் தொழில்களோடு நின்றுவிட விரும்பவில்லை. இன்று சிலர், பாரத நாடு-குடிசைத் தொழில்களினாலேயே வாழ்ந்துவிடும் என்று நம்புகின்றனர். இது தவறான கருத்து, குடிசைத் தொழில்கள் வளர வேண்டும். குடிசைத் தொழில்கள் மூலம்தான் குறைந்த மூலதனத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு தர முடியும். ஆனால், நாட்டின் மொத்தப் பொருளாதார மேம்பாட்டிற்காக-கனரகத் தொழில்கள் தேவை. பாதுகாப்புக்குப் படைக் கருவிகள் செய்யும் தொழில் தேவை. அணுகுண்டுகள் செய்யும் வரை நாம் வளர்ந்தாக வேண்டும்.