பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மக்கள். இந்த மன்னர்கள் அதிகாரம் செலுத்துபவர்கள் அல்லர்; ஆட்சி செலுத்துபவர்கள். இவர்களின் ஆட்சி, வாக்குகளால் அமையும் ஆட்சி! வாக்குகளால் ஆட்சியை அமைக்கும் பொறுப்புள்ள மக்களாகிய மன்னர்கள் வாக்குகளைத் தேர்ந்து தெளிந்து பயன்படுத்த வேண்டும். வாண வேடிக்கைகள், அழகொழுகும் பேச்சுகள், பகட்டான பேரணிகள், அணி அணியாக ஊர்ந்துவரும் கார்கள்இவைகள் மக்களாகிய மன்னர்களின் அதிகாரத்தைக் கெடுக்கும் முதலாளித்துவத்தின் நச்சுப் பூச்சிகள்; இந்த மயக்கத்தில் வாக்காளர்களாகிய மன்னர்கள் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் போல முறை பிறழ்ந்து விடாது குடியாட்சி என்ற செங்கோலைத் தாங்கி, வாக்காகிய நீதியை சமுதாய நீதியின் பக்கமே வழங்க வேண்டும். இங்ஙனம் இவர்களை பாரதி இந்நாட்டு மன்னர் என்று போற்றுகின்றான்.

பாரதியின் படிமுறை வளர்ச்சியில் இன்றைய இந்திய நாடு எந்தப் படியிலும் வெற்றி பெறவில்லை. எங்கு பார்த்தாலும் சாதிச் சண்டைகள், மொழிக் கலகங்கள், மதக் கலவரங்கள். வறுமைக்கும் வளத்துக்குமிடையே அகன்ற இடைவெளி! வாக்குரிமைகள் பறிக்கப்படுகின்றன! இதுதான் இன்றைய இந்தியா,

நம் பாரதியின் வழியில் சாதி வேற்றுமைகளை நீக்கி, எல்லாரையும் ஓரினமாக்கி, இந்தியராக்கி ஒருநிறையில் கொண்டுவந்து நிறுத்தி, ஒரு விலையுடையவராகச் செய்து சமுதாய நீதி காக்கும் மன்னர்களாக்குவோமாக!

அஞ்சோம்! துஞ்சோம்!

வாழ்க்கை என்பது மலர்களின் மீது நடப்பதன்று. வாழ்க்கை என்பது இன்னல்களும் நிறைந்தது; இன்பங்களும் நிறைந்தது. உண்டு, உடுத்துக் கூடிவாழ்வது மட்டும் வாழ்க்கை