பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"இன்னல் வந் துற்றிடும் போததற் கஞ்சோம்! ஏழையராகி

இனி மண்ணில் துஞ்சோம்!"

பாரதியார்

உலகம் இன்பக் கேணி!

இன்று கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் கேலிக் கூத்தாகிக் கொண்டு வருகிறது. பல பெயர்களில் விளங்கிடும் கடவுள் வழிபாடு, வேற்றுமைகளுக்கு உள்ளாக்கப் பெற்று மதச் சண்டைகளும் கடவுட் சண்டைகளும் நடைபெறுகின்றன. தத்தம் மதமே உயர்ந்தது என்னும் மத வெறியும், தத்தம் கடவுளே உயர்ந்தது என்ற கொள்கையும் மக்கட் சமுதாயத்தில் எதிர் விளைவுகளை உண்டாக்கியிருக் கின்றனவே தவிர, சமய நம்பிக்கைகள் வளரவில்லை. மதமாற்றங்கள் தொடர்ந்து செய்யப் பெறுகின்றன. மத மாற்றங்களுக்குரிய காரணங்கள் அற்பமானவை. கடவுள்-மத நம்பிக்கையுடையவர்கள் வேற்றுமைகளை மறந்து தத்தம் நெறியில் நிற்றல் சமயத்திற்கு ஆக்கம் தரும். அது போலவே ஒரே மதத்தில் உள்ள பல்வேறு மக்களும் தத்தம் கடவுளே பெரிது என்று சண்டை போடக் கூடாது. கடவுள் ஒருவர் தான்! ஒருவரே தான்! இந்துக் கடவுள், கிறிஸ்துவக் கடவுள், முஸ்லீம் கடவுள் என்றெல்லாம் கடவுள்கள் பல அல்ல. அனுபவ மெய்யுணர்வு வேறுபாட்டால் சமயங்கள் பலவாயின.

நிலம், நீர், தீ, வளி, வெளி இவை உலகனைத்திற்கும் பொது. இந்த ஐம்பெரும் இயற்கையிலமைந்த உள் பொருள்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இவைகளின் பெயர்கள் நாடுதோறும் மாறுபடலாம். ஆனாலும், பொருளில், பொருளின் தன்மையில் மாற்றம் இல்லை என்பது உண்மை. இப்பொருள்கள் உயிர்க் குலத்திற்குப் பயன்படும் வகையிலும் மாறுபாடுகள் இல்லை. அதுபோலத்தான்.'கடவுள்' என்பதும் உலகிற்கு ஒன்றேதான்!