பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

85


வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமானால் ஆசைகளைத் தவிர்க்க வேண்டும். இவை மட்டுமே அச்சத்திலிருந்து தப்பிக்கப் போதா. உலகியல் ஆட்சியமைப்பில் நியாய வாதிகள்கூட ஆணைக்குக் கட்டுப்படவில்லை என்று நினைத்து அழிக்கப்படுவர். கிரேக்க நாட்டு அறிஞன் சாக்ரட்டீசு சிறந்த சிந்தனையாளர். ஆனால் அவர் காலத்தில் அவரை ஏற்க உலகம் தயாராக இல்லை! ஆட்சியாளரால் நஞ்சு கொடுக்கப்பட்டுச் சாகடிக்கப் பெற்றார். ஏசு, நல்லறிஞர்; சான்றாண்மையாளர். அவரையும் உலகு காட்டிக் கொடுக்க - அநியாயமே ஆட்சியின் இலக்கணமெனக் கொண்ட அரசு, சிலுவையில் அடித்துச் சித்திரவதை செய்து கொன்றது. அப்பரடிகளை நீற்றறையில் இட்டுச் சித்திரவதை செய்தது பல்லவப் பேரரசு. இப்படிப் பல நூற்றுக்கணக்கான சான்றுகள் காட்டலாம்.

இத்தகு கொடுமைகளை-ஆட்சியின் அநியாயங்களைத் தட்டிக் கேட்க வேண்டுமானால் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்களிடத்தில் பிரிவினைகள் வேற்றுமைகள் இருப்பது இத்தகைய ஆட்சியாளர்களுக்கு நல்லது. ஆதலால், பிரிவினைகள் இல்லாதுபோனாலும் பிரிவினைகளைத் தோற்றுவிப்பர். நமது மக்களிடத்தில் பிரிவினைக்குப் பஞ்சமே இல்லை. ஒன்றுக்கும் உதவாத அற்பக் காரியங்களுக்குக்கூடத் தந்தையும் மகனும் நெஞ்சு பிரிந்து வாழ்வர் என்று கவிஞன் பாரதி கூறுகின்றான். அப்பன் ஐந்து தலைப்பாம்பு என்றான்; மகன் ஆறுதலை அதற்கென்றான். போதாதா? தகப்பனுடைய கெளரவம் போய்விட்டது. இருவரும் நெஞ்சு பிரிந்துவிட்டனர். பிரிந்து இருப்பதோடு நிற்பார்களா, என்ன? தகப்பனும் மகனும் பகைவர்களாகி விடுவர். இங்ஙனம் மக்களுக்குள் பிரிவினையும் பகையும் இருக்குமானால் ஒருவருக்கொருவர் தீமை செய்து கொள்வர். அதனால் அஞ்சி வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுத் தீரும். ஆதலால், பிரிவினைகளைத் தவிர்த்து, பகையைத்