பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உலகியலில் பெரும்பாலும் ஆண் மக்களுக்கு அன்புடைய மாமனும் மாமியும் கிடைத்து விடுவதுண்டு. பெண்களுக்கு அன்புடைய மாமனும் மாமியும் கிடைக்க வேண்டும். இது நமது பிரார்த்தனை!

ஓர் ஆன்மா வளர நல்ல குலச்சார்பு தேவை. ஆம்! ஒழுக்க இயல்புகள் குலத்தின் வழிதானே வந்தமையும்! “குலஞ்சிறக்கும் ஒழுக்கம் குடிகட் கெல்லாம்” என்றான் கம்பன். அதுபோலவே உற்றுழி உதவச் சுற்றமும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, பலர் கூடி வாழவேண்டாமா? எல்லாம் இறைவனின் அருட்கொடை! ஊர் என்பது பலர் கூடி ஒப்புரவுடையராக, ஒருமையுளராக வாழும் இடம்; உரிமையும் உறவும் உடையது சுற்றம்.

குலம், அறிவுக்கும் ஒழுகலாற்றுக்கும் களன். இத்தனை நலன்களும் அமைந்த நிலையில் மனிதன் பிறந்து வளர்கிறான். இங்ஙனம், வாழும் நலத்தினைப் பேசியவர் அப்பரடிகள். தரும சேனராக விளங்கியபோது அவருக்கு சமணசமயத்தில் நிலைகொள்ளும் உணர்வு வேறுபட்டது.

சைவத்திற்குத் திரும்புதல்

இந்தச் சூழ்நிலையில் மருணீக்கியாருக்குத் தந்தையாக, தாயாக, தமக்கையாக, குலமாக, சுற்றமாக விளங்கிய திலகவதியார் தவமியற்றினார். நாளும் திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள இறைவனிடத்தில் திலகவதி யார் வேண்டிய பிரார்த்தனை என்ன? “அடியேன் பின்வந்தவனைப் பரசமயக் குழியினின்றும் எடுத்தாள வேண்டும்” என்பதே அந்தப் பிரார்த்தனை!

மருணீக்கியார் முன்செய்த தவமும், திலகவதியார் பிரார்த்தனையும் ஒருங்கிணையத் திருவதிகை ஈசன் திருவுளம் கொண்டான். தருமசேனராகிய மருள் நீக்கியாரை ஆட்கொள்ள அவருக்கு இறைவனால் கடுங்கனல் போன்ற