பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வீடு வேண்டாமா?

இன்று நம் நாட்டில் நீடித்த நிலைபேறுடைய பழமையான ஒரு நாகரிகம் இருக்கக்கூடாதென்று கருதி நாள் தோறும் குடிசை கட்டும் பணியில் பலர் ஈடுபடுகின்றனர். இன்று ஒருவன் குடிசை கட்டுகிறான். நாளை அது நன்றாக இல்லை என்று பிரித்து எறிகிறான்; வேறு புதிய குடிசை கட்டுகிறான். அதனை மறுநாள் இன்னொருவன் பிரித்து எறிகிறான். ஆக நாள்தோறும் கட்டுவதும் பிரிப்பதுமாகிய புதுமையான வீடு கட்டுகிற காலமாக இருக்கிறதே தவிர, குடியிருந்து வாழும் நாகரிகம், இல்லாமற் போய்விட்டது.

பழமையிலே புதுமை

அப்பரடிகள் போன்றோர் பழைய பாரம்பரியத்தை ஒத்துக்கொண்டே பழமைக்கும் புதுமைக்கும் இணைப் பூட்டினர். அப்பரடிகள் முழங்கால் வரை வேட்டி கட்டினார்; நிறைய நீறு பூசினார்; பெரும் பெரும் உருத்திராக்க மாலைகள் போட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கோலத்தைப் பார்த்தால் மிகப் பழைய நூற்றாண்டின் பழமை தெரிகிறது. அவள் உள்ளத்தை அவர் சிந்தனையைப் பார்த்தால் புத்தம் புதிய புதுமையையும் - இன்னும் பின்னால் வரப்போகிற புதுமையையும் - அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறியலாம். அவர் பழமைக்கும் புதுமைக்கும் இணைப்பூட்டி இந்தச் சமுதாயம் அழிந்து படாமல் காப்பாற்றப் பெற வேண்டும் என்ற கருத்தில் ஒரு மாபெரும் இயக்கத்தையே நடத்தினார்.

அப்பரடிகள் புரட்சிக்காரர்

நமது நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவிஞர்கள், ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி இன்னல்களை உண்டாக்கும் சாதிகள் வேண்டா என்று பாடினார்கள்.