பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவனின் திருவருள் என்றோ, 47 ஆக உயர்ந்திருப்பது விதி என்றோ நாம் சர்வ சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.

நீண்ட நெடுநாட்களுக்கு நாம் வாழவே இறைவன் நமக்கு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறான். “பாலைக் கொண்டுபோய்ப் பயன்பெறுமாறு வீட்டிலே கொடு” என்று கொடுத்தால், அதை நாம் இடையிலே கொட்டிக் கவிழ்த்து விட்டுக் கொடுத்தவனின் நோக்கம் அது என்று கூறிவிட முடியுமா? நாம், நமது வாழ்நாள் முழுவதும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்றே இறைவன் விரும்புகிறான். நாமோ, இறைவனின் அருள் நோக்கத்தை, விருப்பத்தை அறியாமல் இடையிலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுகிறோம். எனவே, இடையிலே வாழ்க்கை கெட்டுப் போவதற்குக் காரணம் இறைவனல்ல; இறைவனின் எண்ணத்தை - நோக்கத்தை மதிக்கத் தெரியாத நாம் தான்! எனவேதான் அப்பரடிகள் இந்த உலக மக்களை நோக்கி “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி; மதித்திடுமின்” என்று கூறினார். இந்த நாட்டில் பெளத்த, சமண மாயா வாதங்கள் வந்தமையின் காரணமாக வாழ்க்கையையே மதிக்காத ஓர் உணர்ச்சி, உடல்நலம் ஓம்பாத ஓர் உணர்ச்சி, வாழ்க்கையின் சூழலையே மதிக்காத ஓர் உணர்ச்சி வளர்ந்தது. இந்த நிலைமையைப் பார்த்து வருந்தி - மனமிரங்கியே அப்பரடிகள், மனிதப் பிறப்பு மாண்புறு பிறப்பு; அது மதிக்கத்தக்க பிறப்பு; மகிழ்வின்ப வாழ்வளிக்கும் பிறப்பு; அன்பு அருள் பெருகும் அறிவுப் பிறப்பு; எனவே, மனிதப் பிறவியை மதித்துப் போற்று; அதற்கு ஒரு மரியாதை கொடு; அதைக் கொண்டுபோய்க் குப்பையிலே போட்டுப் பாழாக்கி விடாதே என்று கூறுவதுபோல,

வாய்த்தது நந்தமக்கு
ஈதோர் பிறவி
மதித்திடுமின்