பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

157


குறிக்கோளே உயர்ந்த குறிக்கோளாக உள்ளது. இன்று உங்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோள் இருக்கிறதா? என்று கேட்டால் பலருக்குப் பதில் கூறவே தெரியாது. காரணம், அவர்கட்குக் குறிக்கோள், சாதனம் ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு தெரியாது. சிலர் திருக்கோயிலுக்குச் செல்வர். கோவிலுக்குச் செல்வது அதனால் ஏற்படுகிற நல்லுணர்வைப் பெறுவதற்குரிய சாதனமே தவிர கோவிலுக்குச் செல்வதே இலட்சியமல்ல. நல்லுணர்வைப் பெறுவது இலட்சியம். கோவிலுக்குச் செல்வது அந்த இலட்சியத்தை அடைவதற்குரிய சாதனம் தான். நாம் உடல்நலம் பெறுவது இலட்சியம். அந்த இலட்சியத்தை எய்த நாம் குளிப்பது சாதனம். அதுபோலவே, உள்ளத் தூய்மையை - உயர்ந்த பண்பை நாம் அடைவதற்கு கோயிலுக்குச் செல்வது ஒரு சாதனம்தான். இந்தச் சாதனத்திற்கும் குறிக்கோளுக்கும் வேறுபாடு தெரியாமல் வாழ்க்கை நடத்துகிற மனித சமுதாயத்தை நோக்கி மனமிரங்கிப் பாடுகிறார் அப்பரடிகள். அவர் பாலப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என மூன்று பிரிவாக வாழ்க்கையைப் பிரித்துப் பேசுகிறார். வாழ்க்கையில் குறிக்கோள் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை பயனற்றுக் கெட்டுப் போகும் என்று குறிப்பிடுகின்றார்.

‘இளமையிலே பிழை, வாழ்க்கை நடுவிலே போராட்டம், முதுமையிலே கழிவிரக்கம்’ என்ற மேலை நாட்டுப் பழமொழி ஒன்றுண்டு. எவனொருவன் இளமைப் பருவத்தில் பிழை செய்கிறானோ, அவன் வாழ்க்கையின் இடைப் பகுதியிலே போராடிக் கொண்டேதான் இருப்பான். சிலர் உலகத்தோடு போராடுவர். சிலர் தம் தீய உணர்ச்சிகளோடு போராடுவர். எப்படியாயினும் போராடுவார். வாழ்க்கையில் அமைதியே இருக்காது. அவர்கள் வாழ்க்கையின் இறுதிக் கட்டம் கழிவிரக்கமாகவே இருக்கும். “தாமஸ் உல்சி” போன்ற