பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாய் இருக்கிறதென்றால் அது, தன்னோடு தன் அண்ணன் தம்பிகளாக வாழ்கின்றவர்களோடு மட்டும் பேசிக் கொண்டிருக்க அல்ல. நம் வீட்டிற்குள் இருக்கும் காற்றை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவா நமது வீடுகளில் சன்னல் வைக்கிறோம்? வீட்டின் வெளியில் இருக்கும் ஆரோக்கியமான காற்றுப் போக்குவரத்தினால் ஆரோக்கியமான வாழ்வு அமைவது போல, ஒரு மனிதனுடைய தாய்மொழிப் பற்றும் பிற மொழி உறவும் சேர்ந்து மனிதனின் உள்ளத்தை வளர்க்கிறது; அவனை உலக மனிதனாக்குகிறது.

மரம் நன்றாக வளர்ந்து பூத்துக் காய்த்துப் பயன்தர வேண்டுமானால் மரத்திற்கும் மண்ணுக்கும் நல்ல உறவு இருக்க வேண்டும். மண்ணோடு மரத்திற்கு இருக்கிற தொடர்புதான் அந்த மரத்தைக் காக்கும்; வளர்க்கும். எனினும், அது மட்டும் போதாது; அந்த மரத்திற்கு விண்ணோடும் தொடர்பு வேண்டும். காற்று வேண்டும். கதிரொளி வேண்டும். ஆம் மண்ணிலிருந்து மட்டுமல்ல, வேறு பல சூழல்களிலிருந்தும் அதற்கு உணவு தேவைப்படுகிறது. இவ்வாறு, மண்ணோடும் விண்ணோடும் அந்த மரத்திற்கு உறவு இருந்தால்தான் அது வளர்ந்து வாழ்ந்து பசுமையாகச் செழித்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து பெரும் பயன் தரமுடியும். அதுபோலவே மனித இனம் விரிந்து பரந்து வாழவேண்டுமானால், உலகத் தொடர்பு கொண்டு உயர வேண்டுமானால், சிந்தனையால் செழுமையுற வேண்டுமானால் மனிதனுக்கும் தாய்மொழிப் பயிற்சியோடு பிற மொழி அறிவும் தேவை. இந்த இருபதாம் நூற்றாண்டினுக்கு இன்றியமையாததை நன்றாகப் பாடி இருக்கிறார் அப்பரடிகள்.

வடமொழியும் தென் தமிழும்
மறைகள் நான்கும் ஆனவன் காண்