பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

201


யார்க்கெடுத் துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால்?” என்ற மணிமொழியைப் போல எய்ப்பினில் சேமவைப்பாகப் பயன்படும் சிவனெம்பிரான் இல்லாத சமண நெறியில் யாரிடம் போய் எதைக் கேட்பது? வழங்குவார்தாம் யார்? அங்கு மாசில் வீணையின் நாதம்தான் ஏது? மாலை மதியத்தின் மகிழ்வு ஏது? வீசு தென்றல் ஏது? மலரிடை மணம் நுகர முடியுமா? யாதொன்றும் இல்லை! சூன்யம்! எங்கும் வறட்சி! இன்பமே நிறைந்த உலகைத் துன்ப நரகாக்கிடும் பொல்லாத விரத நெறி வாய் படைத்தவனைத் துய்க்கச் செய்யாமல் அழிக்கும் நெறியன்றோ?

அப்பரடிகள் சிவநெறியில் பிறந்தவர்; உய்யும் நெறி நாடியவர். உறிதூக்கிச் சமண் நெறியில் புகுந்தார்! தேடினார்! தேடினார்! ஆனால், ஆங்குத் தேவர்கோ அறியாத தேவ தேவனைக் காணோம். “என்று வந்தாய்” எனும் இனிய சாயல் காட்டித் தண்ணளி செய்து சுவையமுதுாட்டி வாழ்வித்திடும் வள்ளல் சிவபெருமான் இல்லை! அதனாலேயே சமண் நெறியைப் “பாழூர்” என்றும், யாருமில்லாத ஊரில் பிச்சையெடுக்கப் புகும் பேதைமையைக் காட்டியும் பெரு நெறியில் பிறந்தும் இச்சிறுநெறியில் புகுந்ததை நினைத்தும் பாடுகின்றார்! ஆவியை வீண் போக்காமல் அழகியதாக்கி, தமக்கு அணியென ஆக்கிக் கொண்ட ஆரூரானை நினைந்து நினைந்து நெஞ்சு நெகிழப் பாடுகின்றார் அப்பரடிகள்.

பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற
சமண் நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார் கண்டோடிக்
கதவடைக்கும் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை
யாட்கொண்ட வாரு ராரைப்
பாவியே னறியாதே பாழுரிற்
பயிக்கம்புக் கெய்த்த வாறே!

என்பது பாடல்.