பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

217


பிறந்து, அம்மகிழ்ச்சிப் போக்கில் திட்டமிட்ட அளவிற்கு மேலாக உண்ணக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அது நோன்பை மீறிய செயலாகும். இந்த அடிப்படையிலும் உண்ணும் பொழுது உரையாடுதலைச் சமணம் தடுக்கிறது. சமணர்களுக்குரிய இந்த பழக்கம்-சமண முனிவர்களுக்கு விதித்த இந்த நெறி எப்படியோ நம்மையும் அறியாமல் நம்முடைய குமுகாய வாழ்க்கையிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

அப்பரடிகள் “மூங்கைகள் போல் உண்ணும் மூடர்” என்று உண்ணும்பொழுது உரையாடாதார் பண்பைக் கண்டிக்கிறார்.

பொதுவாக, உண்பதும் ஒரு விழுமிய கடமையேயாம். மிகச்சிறந்த பயனுடைய பணிகளைச் செய்தற்குக் கருவியாக அமைந்துள்ள உடலைப் பேணுதலும் ஒரு தவமேயாகும்.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று திருமந்திரம் பேசுகிறது. இங்கே உடம்பை வளர்த்தல் என்பது சதைப் பிண்டங்களை வளர்ப்பது என்பதன்று. உடலுக்குரிய விழுமிய திறன்களை வளர்ப்பது என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். சதைத் திரட்சிகள் எரி விறகிற்குப் பயன்படுமேயன்றிப் பணிகளுக்குப் பயன்படா. உயிர் உயர்தற்குரிய அன்பிற்கலத்தல், தொண்டு செய்தல் ஆகியனவற்றிற்குத் துணையும் தோழமையும் குமுகாயச் சூழலும் இன்றியமையாதன. தனி மனிதன் தனியே அன்பிற்கலத்தல் இயலாது. அவன் தன்மாட்டே அன்பு காட்டுதலை 'அன்பு' என வழக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அது சுயநலம்! அன்பன்று; அவமேயாம்.

ஒருவன் தன்மாட்டே தான் அன்பு காட்டிக் கொள்ளுதல் தீமையையே பெருக்கும்; இன்பத்தினைப் பெருக்காது. அதனாலேயே அன்பு காட்டுதற்குரிய களமாக