பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

223


பொது உரிமை இயக்கங்களாகிய கூட்டுறவு இயக்கங்கள் பலவீனமுற்றேயிருக்கின்றன. அரசு வழிப்பட்ட பொதுத் தொழில்கள் தனியார் தொழில்களை விட-தனியார் தொழில்களை நோக்கச் செழுமையான இலாபங்களைத் தரவில்லை. ஏன் நம்முடைய சமுதாயத்தின் பொது நிறுவனங்களாகிய கோயில்களை எடுத்துக் கொள்வோமே! அவைகளைப் பேண வேண்டுமென்ற உணர்வு எல்லாருக்குமா இருக்கிறது? இல்லவே இல்லை! இன்று கோயில்களைப் பேணும் பொறுப்பேற்றிருக்கின்ற சிலரிடத்தில் கூட, அது பொது, ஆதலால் பேணுகிறோம் என்ற உணர்வு இல்லை. இங்ஙனம் பேணுவோரில் சிலருக்கு அது வேலை; பலருக்கு அது 'பிழைப்பு', அதனாலேயே நம்முடைய பொது நிறுவனங்களுடைய உடமைகளும் முதலீடுகளும், அதற்கியைந்த பணிகளும் கோடிக் கணக்கில் பல்கிப் பெருக வில்லை.

சமுதாயத்தின் இந்த இழிமனப் போக்கு இன்று நேற்று தோன்றியதன்று. அப்பரடிகள் காலத்திலும் இதே நிலைமை தான்! ஊர் நடுவே, ஒரு மன்றம்! மன்றம் என்றால் பொது இடம் என்று பொருள். நம்முடைய இறைவன் மன்றிலாடுகிறான் என்பது நம் ஆன்றோர் வழக்கு. மன்றத்தையே 'பொதுவில்' என்றும் அழைப்பதுண்டு. மன்றத்திலாடும் இறைவன் என்றால் இறைவன் உலகுக்குப் பொது என்பது பொருள்.

உலகத்தின் முதல் பொதுவுடைமைத் தலைவன் இறைவனே! அவன் மகிழ்ந்தாடக் கூடிய இடம், மன்றம். அந்த ஆனந்த வெள்ளத்தமுதில் திளைப்பவர்கள் உலகத்து மக்கள். இங்ஙனம் பொது மக்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு, முன்பே, தமிழகச் சமய நெறியில் கருக்கொண்டு விட்டது. ஆயினும் பழக்கங்கள் அக்கருவை மூடி மறைத்துச் சிதைத்து விட்டன.