பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

227


ஆசைகள் துன்பத் தருவனவேயன்றி இன்பந்தரா. அதனாலன்றோ,

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

என்று திருமந்திரம் பேசிற்று. ஆசையை விடுக என்றால் ஒன்றும் வேண்டாம் என்பது பொருளன்று. அன்பின், வழியல்லாமலும், பண்புவழிப் பயன் கருதாமலும் விழைவது, ஆசை. உணவு, உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலைப் பேணவும், பேணிப் பாதுகாக்கவும், திறனுறு வகையில் உடலைப் பயன்படுத்திக் கொள்ளவும் உணவை விரும்புதல் ஆசையாகாது. ஆனால், உணவின் மேலேயே ஆசை கொண்டு சுவையில் நாட்டம் வைத்து அச்சுவை உடலியக்கத்திற்குத் தீங்கு பயந்தாலும் உணவை விரும்பியுண்பது ஆசையாகும்.

பொருள், வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பொருளின்றேல் பூவுலகம் இல்லை. நெறிமுறைப்பட்ட துய்ப்பிற்கும், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு, மற்றவர் உயிர் வாழும்படிச் செய்யும் அறமாகிய ஈதலுக்கும் பொருள் தேவை. இந்த வகையில் பொருளை விரும்புதல் ஆசையன்று. அங்ஙனமின்றிப் பொருள் மீதே விருப்பங்காட்டி, “பொருளுடையோன்” என்று பலர் சொல்ல விரும்பித் 'துய்க்காமலும், ஈந்து மகிழாமலும், மகிழ்விக்காமலும் பொருளொன்றையே குறியாகக் கொண்டு சேமிப்பது' ஆசையாகும். மண்ணில் பயிர் தழைக்க மழைத்துளி தேவை. அதுபோல, மனிதகுலம் செழிக்க அன்பு தேவை. உயிர், காதலால் செழித்து வளரும். காதல் பாலுணர்வின் பாற்பட்டது மட்டுமன்று; அதனையும் கடந்தது. காதல் உயிர்களைச் செழிக்கச் செய்யும்; உணர்வுகளைச் செழிக்கச் செய்யும்; தூண்டி வளர்க்கும்; தூய்மை சேர்க்கும்; பொறிகளுக்கும் புலன்களுக்கும் அன்பினைச் சேர்க்கும். இத்தகு தூய காதல் வழி ஒருவன் ஒருத்தியை