பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏழாம் நூற்றாண்டில் உலகத்தின் எந்தப் பகுதியிலும் சுதந்திர வேட்கை கால்கொள்ளவில்லை. மன்னனை மையமாகக் கொண்ட முடியாட்சி நிலவியது. “அரசனின் ஆணையை யாரும் மீற முடியாது; மீறக்கூடாது. ஏன்? அரசன் ஆணை தெய்வத்தின் ஆணை; அரசனது அதிகாரம் தெய்வத்தால் வழங்கப்பெற்ற அதிகாரம்” என்ற கருத்து, ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் அப்பரடிகள் பல்லவப் பேரரசன் ஆணையை மறுக்கின்றார். தனி மனித சுதந்திரத்திற்கு முதல் முழக்கம் தந்தவர் அப்பரடிகளேயாம். சமண முனிவர்களுடைய ஆலோசனையின் வழி, அப்பரடிகளின் தனிப் பட்ட சமய வாழ்க்கையில் பல்லவப் பேரரசன் குறுக்கிட்டதை அப்பரடிகள் வன்மையாக மறுக்கின்றார். ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கிறார். உலக மனித சமுதாயத்தின், முதல் விடுதலைப் பாட்டு முகிழ்க்கிறது; முழங்குகிறது.

நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
'சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடி இணையே குறுகினோமே.

பாடல் இது. இது விடுதலை முழக்கம்;

மரணமிலாப் பெருவாழ்க்கை; துன்பம் நீங்கிய துரய வாழ்க்கை, நின்ற சீலத்தால் பெற்ற ஏமத்தின் முழுயாப்பு (கலப்பு); பிணி நீங்கிய பெருமிதம். ஆம்; அடிமை வாழ்க்கையில் மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்குமா? அடிமை வாழ்க்கையே ஒரு நரகம் தானே; அடிமை வாழ்க்கை ஒரு நடைப் பிண வாழ்க்கை; அடிமை வாழ்க்கையில் பாதுகாப்பு ஏது: அடிமை வாழ்க்கை உடற்