பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

297


அப்பரடிகள் வல்லடி வழக்கில் வாழ்வாரை மையமாகக் கொண்டு சுற்றி வட்டமிடும் சமயத்தை விரும்பினாரில்லை. அவர் சனாதனிகள் காட்டும் காரணங்களைக் கூட மறுக்கிறார். சனாதனிகள், இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரமாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பசுவைத் தின்னும் புலையர்கள் என்று பழி சுமத்தினார்கள், தொழு நோயர்கள் என்று கூறினார்கள். அப்பரடிகள் அந்த விவாதத்தை மறுக்கிறார். புலைத்தன்மை நீங்கத்தானே புண்ணியனடி நண்ணுகிறார்கள். அங்ஙனமிருக்கப் புலையரென்று புறத்தே தள்ளுவது என்ன நியாயம், என்பதே அப்பரடிகள் கேள்வி? அப்பரடிகள் மக்களை வாழ்த்தவும் - வணங்கவும், அணைக்கவும்-அன்பு செலுத்தவும் ஒரே விதிதான் வகுக்கிறார். அவர்கள் “கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகி” இருக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி.

பழந்தமிழகத்தில் - திருக்கோவில்களில் இன்று ஆதிக்கம் செய்கின்ற சாதி முறைகள் இருந்ததில்லை. எல்லோரும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பூவும் நீருமிட்டுப் போற்றி வழிபட்டுள்ளனர். அப்பரடிகள்,

ஆக்கை யாற்பயனென்-அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇல்
ஆக்கையாற் பயனென்?

என்று வினவுகின்றார். இங்ஙனம் சாதி குல வேறுபாடுகளைக் கடந்து திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பூவும் நீருமிட்டு வரிசையாகச் சென்று அருச்சித்து வழிபடுவதே ஆன்றோர் மரபு. இதனைத் திருவையாற்றுத் தேவாரத்திலும் அப்பரடிகள்,

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்