பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்புறுத்தலேயாம். ஆயினும் உயிர் பெற்றுள்ள சிற்றறிவு அடங்கவா செய்கிறது? அது தன்னிச்சையிலேயே ஆட்டம் போடுகிறது; அறிவுப் பொருளைத் திருத்திச் சீராக்குதல் எளிய காரியமன்று. அறிவற்ற சடப்பொருள் எளிதில் பக்குவப்படும். அறிவு நாடகமாடும்; நடிக்கும்; உணர்ந்தது போல் காட்டிப் பின் தன்னெறியே மேற்கொள்ளும்; இன்பத்தைத் துன்பமாகக் கருதும்; துன்பத்தை இன்பமாகக் கருதும்; அடக்கினாலும் சில நாள் அடங்கும்; வாய்ப்பு வந்துழி மிஞ்சும். இத்தனை இக்கட்டான நிலையில் உயிருக்கு அறிவு கொளுத்தியே - அதனை அறியச் செய்தே பக்குவப் படுத்தவும் வேண்டியிருக்கிறது; அதை அடிமைப்படுத்தவும் முடியாது. இன்பத்திற்கு எதிர் துன்பமே. துன்பத்திற்குக் காரணம் அறியாமையும் அறியாமையினால் செய்த செயல்களின் விளைவுகளுமாம். நோய் நீங்குகிறவரை உணவு சுவைக்காததைப் போல, வினைநீக்கம் பெறும்வரையில் நிறை நல் இன்பத்தையும் துய்க்கமுடியாது. ஆதலால்,

முன்பிருந்த வினை தீர்த்திட்டு

என்கிறார்.

தீமை நீங்கினால் போதாது; நன்மை விளங்கிட வேண்டும். இதனை வள்ளுவமும்,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்று கூறியது. அருணகிரியாரும்,

பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்

என்று கூறினார்.

தேவைக்குக் காரணமாகிய அறியாமை நீங்கியவுடன் அறிவு ஆங்கு விளங்க வேண்டும். இறைவன் உயிரிடத்து விளங்கிய முன்னை வினை வாசனை நீங்கிய பிறகு அந்த உயிரின் உள்ளத்தையும் கோயிலாகக் கொண்டு குடியிருந்தருளுகின்றான். உயிர் அறியாமையில் கிடக்கும்பொழுது