பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமு மல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளினர்க் கடம்பில் ஒலிதா ரோயே.

மேலும் சமய வாழ்க்கை தனி ஒர் உயிரின் உய்திக்கு மட்டுமன்று. ஒர் உயிரின் வாழ்க்கையைச் சமுதாய வாழ்க்கையில் இணைத்து வளர்ப்பதே சமயம். சிறந்த சமய நடைமுறை சமுதாய அமைப்பு கால்கொள்ளத் துணை செய்வது. சமுதாயத்தை இணைத்து அனைத்து இன்புறுத்த-இன்புற அன்பு தேவை; அறம் தேவை. தமிழ்ச் சமய இலக்கியங்கள் சமுதாய ஒழுகியலை வலியுறுத்துவன. ஏன்? கடவுளுக்கே 'நீதி’, என்று பெயரிட்டு அழைத்தது தமிழ்ச் சமயம். ஆதலால் சமுதாய வாழ்வியலறங்கள்-உணர்வுகள் இங்கு வேண்டப்படுகின்றன.

சங்க கால இலக்கியங்கள், முழுமையாக வளர்ந்த கவிஞர்கள் பலரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. சங்ககால இலக்கியங்களில் காதல் உண்டு; வீரம் உண்டு; ஆட்சி முறைகள் உண்டு! இவைகளின் ஊடே அறநெறிக் கொள்கைகளும் விளக்கமுற அமைந்து கிடக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். சங்க காலத்தில் வாழ்க்கை முழுமையுற்றிருந்தது. சங்ககால வாழ்க்கை, சீரான வாழ்க்கையாக இருந்ததாலும் வாழ்க்கையில் இயல்பாகவே சமயநெறிச் சீலங்கள் விளங்கியதாலும் சமயத்தை மிகுதியும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடிலாது போயிற்று. ஆயினும் சமய இலக்கிய வரிசையில் இவைகளும் அடங்கியன என்பது தான் உண்மை.

மானிட வாழ்க்கை புலன்களால் ஆயது. புலன்கள் தூய்மையாக இருக்க வேண்டும். பலர், பொறிகளில் தூய்மை காட்டுவர். அஃது அரியதொன்றன்று. இன்று சிலர் புறத் தோற்றத்தில் செவ்விய தோற்றம் காட்டுகின்றனர். அவர்-