பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/353

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமய இலக்கியங்களில் அறநெறி

349


தான்! தவழ்ந்து நடப்பவர் தவறித்தான் வீழ்வர். ஏற்ற முடையவர் அவரை எடுத்தாள வேண்டாமா? வேண்டும் என்பதனால்தான்,

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்....
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

என்றார் அப்பரடிகள்.

சாத்திரங்களைக் காட்டிக் குல கோத்திர வேற்றுமையைக் கற்பிப்பதும் காப்பதும் அறநெறியல்லவே. எல்லாவுயிர்களும் இறையருள் பெறுதற்குரிய பாத்திரங்களே என்று கருதி அன்பு செய்தல்-அவ்வுயிர்களுக்கு உரியனவற்றைச் செய்து உதவுதல்-ஒப்புரவுக் கொள்கை. இதுவே சமய இலக்கியங்கள் காட்டும் அறநெறி.

தென்னாட்டுக்குச் சிவனாகவும், மற்றெல்லா நாடு களுக்கும் இறைவனாகவும் உள்ள பெருமான் உயர்த்தியுள்ள கொடி எருதுக் கொடி, எருது ஒரு சின்னமே! சின்னத்தின் பின்னணியில் சிந்தனை மாட்சியிருக்கிறது. வேளாண்மைக்குத் துணை செய்வது எருது. அது தன் உழைப்பினால் விளைந்த உயர் நெல்லையும், காய்களையும், கனிகளையும் மனித குலம் உண்டு மகிழ அளிக்கிறது. ஆனால், அது மனிதருக்குப் பயன்படாத வைக்கோலைத் தின்று வாழ்கிறது. எருதின் குணங்களைப் போன்ற பண்பாடுடையாரின் நெஞ்சில் பெருமான் எழுந்தருள்வான் என்பதே எருது ஊர்தியின் தத்துவம்.

சமய இலக்கியங்கள் சிந்தனையைத் தருகின்றன; புத்தியைப் புதுமைப்படுத்துகின்றன; மனத்தைத் தூய்மை செய்கின்றன; அன்பினைத் தருகின்றன. அன்பிற் பொதுவுடைமை மலர்கிறது; ஒப்புரவுக் கொள்கை உயர்ந்து விளங்குகிறது; உயிர்க்குலம் ஒன்றாக இணைகிறது. இது சமய இலக்கியங்கள் காட்டும் அறநெறி. அத்தகு அறநெறி நின்று அவனியை வாழ்வித்து வாழ்வோமாக!