பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பிறைச் சந்திரன் கருமேகத்தைக் கிழித்துக்கொண்டு நிறை வடிவம்பெற முன்னேறுகிறது. உயிர்கள் குறையுடையன. ஆனாலும் நிறை நலம் பெறுதற்குரியன. உயிர்கள் நிறை நலம் பெறுதற்குத் தடை, உயிரைப் பிணைத்து நிற்கும் கருமேகமனைய ஆணவம். ஆணவக் கருமேகத்தைச் சீலத்தாலும் தவத்தாலும் நீக்கிக்கொண்டு கொடுங்குன்றில் அமர்ந்துள்ள நல்ல மங்கை பாகன் திருவடிகளைச் சாரும் உயிர்கள் குறைகளினின்று விடுதலை பெறும்; நிறைநலம் பெறும்; திருவருட்பொலிவு பெறும்; வெப்பத்தினின்று நீங்கித் தண்ணளியுடையான் தாள்களைச் சேர்ந்ததால் இன்பத்தில் திளைக்கும்.

ஆணவம், உயிர்களுக்கு உடன் பிறந்தே கொல்லும் நோய். ஆணவம், அறிவை மறைக்கும்; நெறிகளைத் தடுக்கும்; அரக்கத் தன்மையை நல்கும்; நீதியொடு தழுவிய வாழ்க்கையினின்று அகற்றும். அநீதிக்கு அழைத்துச் செல்லும்; அடக்கம் அதற்கு இல்லை. அம்மம்ம! ஆணவத் துடிப்புடையார்க்கு நல்லதுமில்லை, தீயதுமில்லை; உறவுமில்லை, நட்புமில்லை; தவமுமில்லை, சீலமும் இல்லை. ஆணவம் முற்றாக முடிவில் தம்மைச் சார்ந்தாரையே அழிக்கும். இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழி பிரான்மலை நல்ல மங்கைபாகன் தாளினைச் சார்தலேயாம்.

பிரான்மலை என்ற திருக்கொடுங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள நல்ல மங்கை பாகன், இன்பத் திருவுருவன்; தாயிற் சிறந்த தயாவுடையவன். நல்லறிவு கொளுத்துபவன். நன்னெறியில் நிறுத்துபவன். இன்பங்கள் வழங்குபவன். ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தையும் அருளுபவன். நல்ல மங்கை பாகனின் திருவடிகள் ஆணவ வெப்பக்காற்றில் தவிக்கும் உயிர்களுக்குத் தண்ணிழல்; குளிர் நிழல். அத்திருவடிகளே நமது உயிர்க்கு உற்ற துணை! அத்திருவடிகளையடைந்து அயரா அன்பில் வாழ்த்தி வணங்குவோமாக.