பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ளலாம். ஆனால், திருவாசகம் உலகியல் கடந்த ஆன்ம அனுபவம்; திருவருள் அனுபவம்!

பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்த புறம்புறம் திரிந்த
செல்வமே! சிவபெரு மானே!
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!

(திருவாசகம், பிடித்தபத்து-9)
யார் சதுரர்?

வாழ்க்கையே ஒரு வாணிகம் தான்! வாணிகம் தவறல்ல. ஆனால், இலாபமே வேட்டையாக எண்ணி வாழ்தல் தீது. இருபாலும் பயனும் மகிழ்வும் உண்டாகும் வகையில் நடப்பதே நல்ல வாணிகம். ஆன்மிக வாழ்க்கையிலும் வாணிக நடைமுறை உண்டு.

“கொண்டும் கொடுத்தும் ஈசர்க்கு ஆட்செய்தல்”, என்று இசைப்பா கூறும். “மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு” என்பார் திருவள்ளுவர். இஃது ஓர் உயர்வு நவிற்சி! மாரி, உயிரினங்களுக்குச் செய்யும் அளவு நாம் அதற்குக் கைம்மாறு செய்ய இயலாது என்பது உண்மை. ஆயினும் மழைக்குரிய சாதனங்களாகிய ஏரி, குளங்களைப் பராமரிப்பதும், புயலை நீர்த் திவலைகளாக மாற்றும் குளிர்ச்சியைத் தரக்கூடிய மரங்களை வளர்ப்பதும் நாம் மழைக்குச் செய்யும் கைம்மாறு! ஆனாலும் மழையின் உதவி அளவிலும் பயனிலும் கூடுதலானது. பொதுவாகவே மானிடரைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே நிறையக் கொடுக்கும்;