பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குதிரைகள் வாங்கவேண்டும் என்பது! ஆனால் வாதவூரர் திருக்கோயில் கட்டுகிறார்! இதற்கு முதற் காரணம் சிவம் ஆட்கொண்டருளியதால் ஏற்பட்ட மாற்றம் மட்டும் அல்ல. குதிரைகள் வாங்கினால் போருக்கு மட்டுமே பயன்படும். திருக்கோயில் கட்டினால் மக்கள் வழிபட்டு இன்புறுவர்; சிற்பம் வளரும்; ஓவியம் வளரும்; இசை வளரும்: வேலை வாய்ப்புப் பெருகும். ஆதலால், சமுதாயத்தின் மையமாக விளங்கும் திருக்கோயில் கட்டினார். அரசன் ஆணை என்னாவது? வாதவூரர் முதலமைச்சர்! அரசனால் மதிக்கப் பெற்ற முதலமைச்சர்! ஆதலால் வாதவூரரின் எண்ணம் அரசன் செய்யும் பணியின் நன்மை நோக்கி ஏற்பன் என்பது. ஆனால், அரசன் வாதவூரர் செயலை ஏற்றுக் கொண்டானில்லை. வாதவூரர் தண்டனைக்கு ஆளாகிறார். வாதவூரருக்காக இறைவனும் தண்டனை-பிரம்படி பெறுகிறான்.

அருட்செல்வர் நாடிய மாணிக்கவாசகர் ஆட்சியில் பொருளும் பயனும் அன்பில் மாறாமல் இருந்ததால் இந்த மடை மாற்றம்; அவர்தம் அன்பினில் சிவம் விளைந்தது! அன்பும் சிவமும் கலந்த மாணிக்கவாசகரால் திருவாசகம் விளைந்தது! திருவாசகம் நம்மனோர் இதயத்தில் இருளகற்றி இன்பம் விளைவிக்கிறது.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!

(பிடித்தபத்து-3)