பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

119


இறைவனுக்கும் உயிருக்குமுள்ள உறவு குறியெதிர்ப்பு இயலானது தன்னலமற்றது. உயிரின் ஆக்கத்திற்காக இறைவன் தொடர்பு. கடவுள்-உயிர் இரண்டுமே காலங் கடந்தவை. ஆதலால், காலத்தால் பிரிவு நிகழ வாய்ப்பு இல்லை. இறைவன் உயிர்க்குயிரதாக இருப்பதால் இடத்தால் பிரிவும் இல்லை. அதுமட்டுமல்ல. “நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும்” இறைவன் பிரிவதில்லை. இறைவன் சொர்க்கத்தில் வெளிப்பட்டும் நரகத்தில் மறைந்திருந்தும் அருள் செய்வான். தாய், மருத்துவத்திற்கு ஆளாகின்ற குழந்தைக்கு மறைந்தே இருப்பாள். பிரியாதது மட்டுமே தனித்துணைக்கு உரிய சிறப்பன்று. உற்றுழி உதவுதலில் இறைவன் தனித் துணையேயாம். நோய்க்கு மட்டுமல்ல; நோயின் மூலத்திற்கும் மருத்துவம் செய்து காப்பாற்றுபவன் இறைவன். பொன்னும் பொருளும் போகமும் தந்தருளி மேலும், திருவையும் சேர்த்து வைப்பவன். ஆதலால் அவன் உயிர்க்குத் தனித்துணை ஆயினன்.

தனித்துணையாகிய இறைவன் ஆட்கொண்டருள, வான்பழித்து இம்மண்ணிற்கு வந்தருள்கின்றான்! இல்லை, இல்லங்கள் தோறும் தேடி எங்கே என்று வந்தருளி நிற்கின்றான். இறைவன் வந்ததைக் கண்டும் காணாமலும் பணியில் ஈடுபட்டிருப்பதாகப் பாவனை காட்டினேன்! நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை! ஆன்மா இருக்கிறது! இறைவன் நிற்கிறான். திருவடி நோக நின்றருள் செய்கின்றனன். நாழிகைகள் ஓடுகின்றன. நாட்கள் ஓடிக் கழிகின்றன. ஆயினும், இறைவனை நிமிர்ந்து பார்க்கும் உளப்பாங்கு வரவில்லை. ‘வருக’- என்று வணங்கி அழைக்கவும் மனம் ஒருப்படவில்லை. முகமன் கூற, உபசரிப்பு செய்ய எழுச்சி கொள்ளவில்லை. இறைவன் சும்மா இருப்பானா? இறைவன் தான் வந்திருப்பதை அறிவிக்கத் தன் திருவடிகளை நிலத்தில் தோயச் செய்து தாளந்தப்பாது தூக்கி எடுத்து வைக்கின்றான். அடக்கமாகக் காலை மாற்றுகிறான். ஆயினும் ஒலி கேட்கிறது. அந்தக் சூழ்நிலையிலும் நான் கண்டு கொள்ளவில்லை.