பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாணிக்கவாசகர் நச்சாது அருளாளரானது அதிசயம் தானே! வான்பழித்து இம் மண் புகுந்து இறைவனால் மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப் பெற்றதும் அதிசயம் தானே! இனிய தமிழ், இன்பத் தமிழ் தேனூறும் திருவாசகமாக என்புருக்கும் பாடல்களாக அமைந்தமையும் அதிசயம் தானே! இறைவனின் கருணையை இனந்தெரியாத உணர்வில் மாணிக்கவாசகர் அனுபவித்ததின் விளைவு அதிசயப்பத்து.

‘நீதி’ என்றால் என்ன? மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்த்து ஒழுகுதல் நீதி! விருப்பு- வெறுப்புக்களைக் கடந்து யார்மாட்டும் ஒத்த நிலையில் பழகுதல் நீதி! அவரவர்க்குரியன கிடைக்குமாறு செய்தல் நீதி! கொள்வனவும் கொடுப்பனவும் மிகைபடாமலும் குறைவுபடாமலும் நிகழ்வது நீதி! அகனமர்ந்த ஒழுகுமுறை நீதி! இன்பம்-துன்பம் இவற்றினால் பாதிக்கப்படாமல் ஒரு நிலையாய் நிற்றல் - ஒழுகுதல் நீதி! நீதி-குணம் நீதிக்குணம் மேவிச் செயலில் பொதுமை பொதுளல் நீதி சார்ந்த வாழ்க்கை. நீதியே உலகத்தின் நியதிகளை, முறைமைகளைத் தோற்றுவிக்கின்றது. இயற்கையாய் அமைந்த நீதியிலிருந்தே அரச நீதிகள் பிறந்தன. ஆனால் இயற்கையாய் அமைந்துள்ள நீதியை அரச நீதிகள் பிறழ்ந்த வரலாறுகள் உண்டு. இயற்கையாய் அமைந்த நீதி யாண்டும் மாறியதில்லை!

மனித குலம் தொடக்கத்தில் நீதியைச் சார்ந்து வாழ்ந்திருக்கவேண்டும். அப்போது கூட்டு வாழ்க்கையும் கூட்டு உழைப்பும் இருந்தன; ஆக்கிரமிப்புக்கள் இல்லை; சுரண்டல் இல்லை. ஆதலால் ஆதிகாலத்தில் மனித வாழ்க்கையில் நீதி இருந்தது. மனிதனின் உடல் வலிமை வளர, வளர, புத்திக் கூர்மை வளர வளர நீதி கெட்டது. பாபக் கழுவாய் முறைகள் தோன்றியதன் விளைவாக பாபங்கள் பெருகி வளர்ந்தன. கடவுளுடன் பேரம் பேசலாம் என்ற நிலை, நீதியை தாழ்த்திவிட்டது! இன்று மனிதன்