பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

139



சிவன் எம்பிரான், மேரு மலையையே வில்லாகக் கொண்டு போர் செய்தவன். அத்தகு பெரியோனுக்குத் தன்னை ஆளுதல் மிக மிக எளிமையான ஒன்று. அது மட்டுமா? இறைவன் கொன்றை மாலை அணிந்திருக்கின்றான். சிவபெருமான் அணிந்துள்ள கொன்றை மாலை அவனே உலகிற்கு முதல்வன்- தலைவன் என்பதனை உணர்த்துகின்றது. தலைவனாக விளங்குபவன் தன்னைச் சார்ந்தாரை எடுத்தாளாமல் கைவிடுதல் அழகன்று என்று உணர்த்தும் பாங்கறிக. கொன்றை மாலை ஓங்கார பிரணவ வடிவமாயுள்ளது. ஓங்காரம் வேதம் முதல் அனைத்துக் கலைகளுக்கும் முதலாகும். ஓங்காரத்தின் பொருள் சொல்லத் தெரியாமல் நான்முகன் வாங்கிய குட்டை, நினைவில் கொள்வது நல்லது. இந்த உலகத்தின் முதல் ஒலி ‘ஓம்’! இந்த உலகத்தின் முதல் எழுத்து ‘ஓம்’! இறைவனே ஓங்கார வடிவினன். சிவலிங்கத் திருமேனியில் பீடம் (ஆவுடை) விந்து, இலிங்கம் நாதம் என்று சாத்திரம் கூறும். நாம் ஏதாவது எழுதத் தொடங்கினால் பிள்ளையார் சுழி போடுகிறோம். அதுவும் ஓங்காரம்தான். விந்து பக்கத்தில் நாதவடிகை இட்டு எழுதுதல் பிள்ளையார் சுழி. அ+உ+ம்=ஓம் ஆயிற்று. இறைவா, சிவனே! ஆன்மாக்களின் வாழ்க்கைப் பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவனே நீதானே! பிள்ளையார் சுழி போட்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்த இறைவன் அந்த பயணத்தை இனிதே முடித்து வைக்க வேண்டாமா? காத்தருள வேண்டாமா? ‘ஓம்’ என்றால் காப்பவன் என்பது பொருள் அல்லவா? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன. இறைவனுடைய கொன்றை மாலையைச் சிந்திக்கும் பொழுது!

இறைவன் தனக்குவமை இல்லாதவன். தமிழ் மறையும் ‘தனக்குவமை இல்லாதான்’ என்று கடவுளைப் போற்றுகிறது. அப்பரடிகள் “உவமன் இலி” என்றார். நபிகள் நாயகமும் “கடவுளுக்கு உவமையாக- ஈடாக எதையும் கூறக்கூடாது"