பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

149


நிகழ்த்துபவன். ஆன்மாக்களின் கருத்தறிந்து முடிப்பவன்; வேண்ட முழுதும் தருபவன்; உய்வார்கள் உய்யும் வகையில் ஆட்கொண்டருளிச் செய்பவன்; பொன்னும் மெய்ப் பொருளும் தருபவன்; துய்ப்பனவெல்லாம் தந்தருள்பவன்; உய்யும் நெறியில் உய்ப்பன தந்தருளித் தாயிற் சிறந்த தயாவுடன் தொடர்ந்து நின்று காத்தருள்பவன். அதனால் சிவனே தலைவன்; தனித்துணை! சிவபெருமானைத் தலைவனாகப் பெறுதல் தவத்தின் ஆக்கம்; பயன்! அதனால் அடியார்கள் சிவபிரானை “உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்” என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர். சிவபெருமானைப் பிரானாக- தலைவனாகப் பெறுவதைவிட ஆன்மாக்களுக்கு வேறு பேறு ஏது? அதனாலன்றோ “எங்கெழில் என் ஞாயிறு?” என்றும், “வானம் துளங்கிலென்? மண் கம்பமாகிலென்?” என்றும் பாடுகின்றனர். அப்பரடிகள், “இறுமாந்திருப்பதென்று கொலோ?” என்றே பாடுவார்.

சிவநெறியின் சிறப்பு, சிவபெருமானுக்குப் புகழ் சேர்ப்பது மட்டுமல்ல. சிவனடியார்களுக்குப் புகழ் சேர்ப்பதே இறைவன்- சிவபெருமானின் திருவுள்ளம்! சிவனடியார்களைச் சிவன் எனவே தெளிந்துணர்ந்து வழிபாடு செய்யுமாறு சாத்திர நூல்கள் அறிமுகப்படுத்துகின்றன. ஆதலால் சிவபிரானைத் தேடுவதற்குப் பதில் சிவனடியாரைத் தேடலாம். இது எளிதும் கூட.

தமிழ்நாட்டுப் பெண்கள் களவுவழிக் கற்புக்குச் செல்பவர்கள். ஆம்! ‘களவும் கற்றுமற’ என்று ஒரு பழமொழி உண்டு. தலைவியைக் காதலித்த காதலன் களவில் கூடும் காலத்தை நீட்டித்துக் கொண்டே சென்றான். களவுக் காலம் கூடுதல் அலர் தோன்றுவதற்கு வாய்ப்பினை உண்டாக்கும் என்றுணர்ந்த தோழி, தலைமகளை நோக்கிக் களவை மறந்து விடுக! திருமணம் செய்துகொண்டு கற்பியலைத் தொடங்குக என்றுணர்த்திய பழமொழி இது. பழந்தமிழகத்தில் காதல்