பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

153


இந்தப் பதவி, புகழ் ஆசை உண்டு. தேவர்களின் பதவி ஆசைதானே தக்கன் வேள்வி! வேள்வியில் சொரியப் பெறும் அவி, சிவபெருமானுக்கே உரியது. ஆனால் மற்றைத் தேவர்களும் அவிப்பொருளுக்கு ஆசைப்பட்டனர். தக்கனைக் கொண்டு வேள்வி இயற்றினர் தேவர்கள். உயர் பீடத்தில் அமர்ந்தனர்; அவிப் பொருளைப் பெற்றனர்; இல்லை, இல்லை! மாணிக்கவாசகர் வாக்குப்படி ‘தின்றனர்’. தகுதியில்லாத ஒன்றினைப் பெருமை கருதியும் சுவை கருதியும் உண்டனர் என்பது ‘தின்றனர்’ என்று இழிவாகப் பேசப்படுகிறது. இங்ஙனம் பெருமை கருதி வேள்வியில் சொரிந்த அவிப்பொருளைத் தின்ற தேவர்கள்- கடலில் எழுந்த அமுதையும் உண்டனர். நஞ்சு கடலில் எழுந்தபோது தேவர்கள் என்ன செய்தார்கள்? ஆபத்தில் காப்பதன்றோ தலைமையின் இலக்கணம். ஆபத்தில் காக்கும் தலைமையே புகழுக்குரியது. நஞ்சைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓடினர். சிவபெருமானை நோக்கிக் காப்பாற்றும்படி அழுதனர்; அரற்றினர். சிவபெருமானும் நஞ்சினை உண்டு அமரர்களுக்கு அருள் செய்தனன். இதுவே புகழுதற்குரிய சாதனை.

“விண்ணோர்கள் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்த"தால்

சிவன் புகழ் விண்ணையும் மண்ணையும் தழீஇய புகழாயிற்று. நீலகண்டம் பெற்றமையின் எவ்வுயிர்க்கும் தலைவன் ஆனான்; ஈசன் ஆனான்.

இறைவனுக்கு- சிவபெருமானுக்கு மூன்று கண்கள். அவை முறையே ஞாயிறு, திங்கள், தீ. இந்த மூன்று கண்களில் தீ ஒரோவழி கட்புலனுக்கு வருவது. ஆயினும் பயன்பாடு மிகுதியுடையது. தீ, நெற்றிக்கண் அறிவுக்கண். தீ, தூய்மையற்றவனவற்றையெல்லாம் அழிக்கும். ஆனால் தீ ஒரு

கு.இ.VIII.11.