பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

163


ஒறுத்தலினால் விளைவது துன்பமே! ஆதலால் இறைவா! என்னை ஒறுத்தது போதும்! இனிமேலும் ஒறுத்து வருத்தந் தரவேண்டாம்! என்னைப் பணிகொள்! உடல் பணிகளில் ஈடுபட்டால் வினை நீங்கும். துன்பங்கள் தொடரா! இறைவா, நீ எனக்கு உடல் தந்தருளியதே, பணி செய்யத்தானே! கண்கள் இயல்பாகப் பிறரையே பார்க்க உதவுகின்றன. இதன் அமைப்பு விதி என்ன? பிறர் நலம் காண முயலுக, பிறரொடு உறவு கொள்க என்பதுதானே! உடற்பொறிகள் அனைத்தின் அமைப்பும் பிறர் நலம் கருதியதாகத்தான் அமைந்துள்ளன. ஆதலால், என்னைப் பணிகொள்! பணி செய்தால் பொறி புலன்கள் அன்பில் தோயும்! எல்லோரிடமும் பணிந்து பணி செய்வதால் தாழ்வெனும் தகைமை வந்து பொருந்துகிறது.

ஆன்மாக்களின் உய்தியையே குறிக்கோளாகக் கொண்ட தலைவனே! தனக்குவமை இல்லாத தலைவனே! நான் என்ன செய்வேன்? இறைவா, நீயே பணித்தருள்! ‘இது செய்க!’ என்று பணித்தருள்! உன் விருப்பமே என் விருப்பம்! பணித்த வண்ணம் செய்வேன். காலந்தாழ்த்தாது அருள் செய்க! காலம் தாழ்த்திடின் செத்துப் போவேன்! நான் செத்துப் போனால் எல்லோரும் சிரிப்பர்! வேண்டாம் ஐயனே அருள் செய்க!

இறைவா! அனுபவித்த அல்லல்கள் போதும்! இனி மேலும் அல்லல்களைத் தராதே! ஒறுத்திடாதே! பணி கொண்டு அருள்செய்! ஒரோவழி நான் பணி செய்ய மறுத்தால் என்னைப் பலரறியக் கூவியழைத்துப் பணி கொள்! பலரறியப் பணி கொள்! பணி செய்தலே வினை நீக்கத்திற்கு வழி! இறைவா, திருப்பெருந்துறை இறைவா அருள் செய்! என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். அத் திருப்பாடல் இது.

அடியேன் அல்லல் எல்லாமுன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறா!எம்
கோவே! ஆ, வா என்றருளிச்