பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

173


உணவு உண்டு. ஆனாலும் பஞ்சம் இருக்கிறது. தனி மனிதனின் பேராசையே பஞ்சத்திற்குக் காரணம். விசாரசருமர் இறைவனுக்குப் பால் முழுக்காட்டியதில் பசுக்களின் சொந்தக்காரர்களுக்கு யாதோர் இழப்பும் இல்லை. அவர்களுக்குக் கிடைத்த பாலில் குறைவும் ஏற்படவில்லை. ஆயினும் விசாரசருமரின் வழிபாட்டிற்கு இடையூறு செய்கின்றனர். இதுதான் மனிதனின் விபரீத புத்தி.

சண்டேசுவரர் சிவயோகத்தில் அமர்ந்தருளிப் பூசை செய்கிறார். தந்தை எச்சதத்தர், தன் மகன் விசாரசருமரை அடிக்கிறார். ஆயினும் விசாரசருமரின் சிவயோகம் கலையவில்லை; பூசை நிற்கவில்லை. தன்னை மறந்து தலைவன்தாள் நினைந்த நிலை. தற்சார்பு முழுதும் அற்ற நிலை. ஆதலால், தந்தை அடித்த அடிகள் யாதொரு பயனையும் தரவில்லை. தந்தை எச்சதத்தர் பாற்குடத்தை இடறிய நிலையில் விசாரசருமருக்கு விழிப்பு வந்துவிட்டது. ஏன்? குறிக்கோளுக்கு அல்லவா இடையூறு வந்துவிட்டது. குறிக்கோளை இழந்து வாழ்வதால் பயன் என்ன? விசாரசருமரின் குறிக்கோளாகிய சிவத்திற்குத் திருமுழுக்காட்டல் என்ற குறிக்கோளுக்கு இடையூறு செய்தவரின் கால்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன.

தற்சார்பற்றுக் குறிக்கோள் சார்ந்து வாழ்ந்த நிலை, விசாரசருமரின் நிலை. இன்று நமது மக்கள் கூட்டத்திற்குக் குறிக்கோள் இல்லை. ஒரோவழி இருந்தாலும் குறிக்கோளுக்காகப் போராடுவதில்லை; வாழ்வதில்லை. எங்கும் தற்சார்பு வாழ்க்கை நிலையே மேலோங்கி நிற்கிறது. இது நமது மரபு இகந்து வாழும் முறையாம். குறிக்கோள் இலாது வாழும் வாழ்க்கை, கெட்ட வாழ்க்கை.

குறிக்கோள் அவரவர் நிலையில் அவரவர் தகுதி, விருப்பங்களுக்கேற்ப எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆதலால், குறிக்கோள் என்பது ஓர் ஒழுங்கமைவுடன் அமையாது;