பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

179


சக்தியாக இல்லாமல் பணி செய்தலே தூண்டுதல் சக்தியாக இயங்கினால் நாம் வளர்வோம்! நமது நாடு வளரும். பணி செய்வதில் ஆர்வம் வேண்டும்’ விருப்பம் வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்தல் வேண்டும்.

“என் கடன் பணி செய்து கிடப்பதே”

என்றார் அப்பரடிகளும். பணியைப் பணிக்காகவே விருப்பார்வத்துடன் செய்தல் வேண்டும். பணியின் விளைவுகள், எதிர் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏன்? பணியின் பயனைக்கூட எதிர்பார்க்கக் கூடாது. “கிடத்தல்” என்பது அஃறிணை நிலை. அஃறிணைப் பொருள்கள் காலத்தொடு இசைந்து நின்று பணி செய்யும் பாங்கினை அறிக. பூத்துக் காய்த்துப் பயன் தரும் மரங்களை நோக்குக. அம்மரங்கள் வரவேற்புரையையும் எதிர்ப்பார்ப்பதில்லை; நன்றி கூறலையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஒரோவழிச் செய்தாலும் விருப்பார்வத்துடன் செய்வதில்லை. வேண்டா வெறுப்பாகச் செய்கிறான். கூலியையே குறியெதிர்ப்பாக உடைய உழைப்பு, பூரண பலன் தராது. ஆதலால், நமக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் நமக்கு முதலில் வேலை தரட்டும்; பணிகள் வழங்கட்டும். எவரொருவர் பணிகளை வழங்கித் திறமையையும் அனுபவத்தையும் பெற உதவி செய்கிறார்களோ அவர்களே நமக்கு மிகவும் வேண்டியவர்கள்; நல்லது செய்பவர்கள். பணிகளை வழங்காது சோறும் துணியும் வழங்கினால் அது உதவியாகாது; வாழ்விப்பதாகாது; அதனாலேயே சேக்கிழார், “கைத்திருத் தொண்டினை”ப் போற்றிப் புகழ்கிறார். இன்றோ வேலையைக் கண்டால் அஞ்சி ஓடுவது, வேலையை ஒத்திப் போடுவது, தட்டிக் கழிப்பது, அல்லது வேலை செய்வதற்கு சோம்பற் பட்டுக்கொண்டு விடுப்புகள் எடுப்பது போன்ற தீய பழக்கங்கள் இந்தியர்களை ஆட்கொண்டிருப்பதனாலேயே இந்தியா விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும்