பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

மிகக் கடுமையான செயல். அத்தகைய அருந்தவத்தை அடிகள் செய்தருளினார்கள்.

அடிகளின் சிந்தனைக் களமாக விளங்கியது திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம்.

திருப்புத்தூர்த் தமிழ் சங்கம் உருவாக்கிய கொள்கைகளைச் செயற்படுத்தும் திணைக் களங்களாக விளங்கியவை அருள்நெறித் திருக்கூட்டமும், தமிழ்நாடு தெய்விகப் பேரவையும் ஆகும்.

மரபுவழி மாறாப் பழமையையும் சமுதாய முன்னேற்றத்தை உள்ளீடாகக் கொண்ட புதுமையையும் இணைத்த கொள்கையை உருவாக்கும் போதும் செயற்படுத்தும் போதும் தவத்திரு பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரை முன்னிலைப்படுத்தித் திட்டமிடுவார்கள். பேரூரடிகளுடன் இணைந்தே செயல்முறைத் திட்டம் அரங்கேறும். முக்கியமான கொள்கை முடிவு எடுக்கப் பெறுகின்ற காலத்தில் பேரூர் அடிகள் இல்லையானால் மனம் வருந்துவார்கள்.

அடிகள் பெருந்தகையுடன் விமானம் மூலம் வடநாட்டுப் பயணம் செய்தமைக்குரிய நல்லூழ் எனக்கு அமைந்தது. இருடிகேசம், அலெக்நந்தா, தேவ ப்ரயாக் ஆகிய இடங்களில் அடிகளுடன் யான் மட்டுமே இருந்து, பணிசெய்து, கலந்துரையாடி மகிழ்ந்த காலமும் உண்டு.

தெய்விகப் பேரவையின் சார்பில் திருக்கோயிலை மையமாகக் கொண்ட பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று அயராது உழைத்தார்கள். திருக்கோயிலை மையமாகக் கொண்ட அனைத்துக் கலைகளுக்கும் பட்டயப்படிப்பு, முதுகலைப் படிப்புக்குரிய திட்டமும் பாடத்திட்டமும் பன்னாள் முயன்று உருவாக்கப்பெற்றன. பல்துறை சார்ந்த கலைஞர்கள், அறிஞர்கள் பாடுபட்டார்கள். அந்தத் திட்டம் முழுமையாகத் தகர்ந்தபோது அடிகள் சமுதாய முன்னேற்றத்தை நேர்நின்று நோக்கினார்கள்.

திருக்கோயிலின் வழியில் சமுதாய முன்னேற்றம் என்ற வகையில் ‘குடிகளைத் தழுவிய கோயில், கோயிலைத் தழுவிய குடிகள்’ என்ற மகாவாக்கியம் எழுப்பப் பெற்றது. பின்னர் மெல்ல, மெல்ல அடிகள் சமுதாய முன்னேற்றத்தை நேர்நின்று நோக்கியருளினார்கள். விளைவு: ‘குன்றக்குடித் திட்டம்’. இத்திட்டம் உலகளாவிய புகழ்