பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பார். அதாவது சீவன் சிவனாயிற்று. “நான்” பரந்த வெளியில் ஒற்றை மரம்! ‘நாம்’ அடர்ந்த தோப்புக்குள் ஒரு மரம்! பரந்த வெளியில் உள்ள ஒற்றை மரத்திற்குச் சூறைக் காற்றடிக்கும் போது பாதுகாப்பில்லை. தோப்புக்குள் உள்ள மரத்துக்குப் பாதுகாப்பு உண்டு. “நான்” மனித குலத்தின் தீமைகளுக்கெல்லாம் மூலகாரணம். இதுதான் அப்பரடிகள் கூறிய மூலநோய் போலும்! “நான்” உடன் பிறந்தது.

“எனது” என்பது தீமை, “என்னுடையது” என்ற தீமையே அழுக்காற்றின் தாய்! வீட்டுக்கும் வீட்டுக்கும் இடையேயுள்ள சுவர்களும் வேலிகளும் தோன்றியது. “எனது” என்பதிலிருந்து தான்! வளம்- வறுமை, களவு- காவல் பிறந்து வளர்ந்ததும் ‘எனது’ என்ற செருக்கினால் தான். பகைமைக்கும் கூடக் காரணம் ‘எனது’ தான். இந்த ‘எனது’ நீக்குதல் ‘நான்’ அகற்றுதலைவிடக் கடினம். எனது சொத்து என்பது பற்றிப் பிடித்துக்கொண்டு வளர்கிறது. ‘எனது’க்குத் தலைசிறந்த பரிவாரம் அரசு. “என”தின் ஏவல் கேட்போர் ஆட்சியாளர்; காவல்துறையினர்; பதிவாளர் துறையினர். எனது என்ற தீமை ஆட்சிக் கட்டிலிலேயே ஏறிவிட்டது. ‘நான்’ ‘எனது’ என்பதை செருக்கு என்றது வள்ளுவம். ‘நான்’ ‘எனது’ என்ற மாயம் மனிதனைக் கெடுத்துவிடுகிறது. ஏன்? மனிதனாக வாழ அவை அனுமதிப்பதில்லை.

‘நான்’ என்னும் செருக்குடையவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வான்; தான் செய்யாததைச் செய்ததாகக் கூறுவான்; பெருமையைத் தேடுவான். உரிய விலையின்றிச் செல்வத்தைத் தேடுவான். காரண காரியமின்றி ‘நான்’ மட்டுமே கருவியாகக் கொண்டு மிரட்டி, பயமுறுத்திப் பணம் கேட்பான். “நான் ஆணையிட்டால்!” என்பான். இந்த ‘நான்’ காரணமாகப் பொய் கூறுவான். ‘எனது’ என்பது, பொய் என்ற உரத்திலேயே வளரும். பொய்யும் வளரும் தன்மையது. விளையாட்டாக அல்லது அவசியத் தேவையாக ஒரு பொய் வாழ்க்கையில் தோன்றிவிட்டால் பொய் நாளும்