பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழும் களங்கள் தோறும் நடிப்பு மாறும்! வீட்டில் நடிக்கும் நடிப்பு வேறு! நாட்டில் நடிக்கும் நடிப்பு வேறு! சமூக நடிப்பு வேறு! நாட்டிற்குரிய நடிப்பு வேறு! வேலையிலும் நடிப்பு உண்டு! சமூக சேவையில் தொண்டும் உண்டு; நடிப்பும் உண்டு! நடிப்பை எளிதில் கண்டுணர முடியாது. நம்பிக்கைகளை வளர்த்து அதன் பிறகுதான் நடிப்பு தோன்றும்! கடின உழைப்பாளி போல நடிப்பர். ஆனால், அவர் செய்யும் வேலைகள் ஊர்ந்து செல்லுமே தவிர, நகர்ந்துகூடச் செல்லா. அன்பிலும் விசுவாசத்திலும் முதிர்ந்தவர் போலக் கண்ணீர் சிந்துவார். ஆயினும் அன்பு என்பது மருந்துக்குக்கூட கிடைக்காது. நடிகர்கள் நாடகம் முடிந்தவுடன் நாடக மேடையைவிட்டு இறங்கி விடுவது போல, நடிக்கும் நண்பர்கள் அவரவர் காரியம் முடிந்தவுடன் அகன்றுவிடுவர்; அந்நியராகி விடுவர். பின் அழைத்துத்தான் ஆகவேண்டும்! வாங்கினதை மறந்தே விடுவர். மனித குலத்தில் மட்டும் நட்பும் உறவும் சீராக அமைந்துவிட்டால் வறுமை ஏது? ஏழ்மை ஏது? பகை ஏது? கலகம் ஏது? எல்லா நடிப்பிலும் “தலைமை நடிப்பு அலாதியானது; சுவை மிக்கது. இன்று தலைவராக ஆசைகொண்டு திரிவோருக்குத் தகுதியே இல்லை! ஆனால், எல்லோருக்கும் தலைவராக வேண்டும் என்று ஆசை.

வேள்வியில் இடம்பெறும் அவியுணவு சிவனுக்கே உரியது. அவனே சாகாதவன்! மூவாதவன்! பிறவா யாக்கைப் பெரியோன்! ஆனால், மற்றைத் தேவர்களுக்குத் தாங்களும் தலைவர்களாக ஆசை! தக்கன் வேள்வியில் தலைவர்கள் ஆனார்கள்! அவியுணவை உண்டார்கள்! பின் பாற்கடல் கடைந்தபொழுது முதலில் ஆலகால நஞ்சு எழுந்தது! தேவர்கள் அலறி ஓடினார்கள்! எம்பெருமான் நஞ்சை உண்டு அமரர்களைக் காப்பாற்றினான்! தேவர்களுக்கு அமுதைக் கொடுத்தான்!