பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

பெற்றது. மைய அரசின் பார்வையைக் குன்றக்குடிப் பக்கம் திருப்பியது இத்திட்டமே.

அடிகள் திருமுறைத் தொடர்களைக் கையாளுவதுபோல, சாத்திரத் தொடர்களைக் கையாளமாட்டார்கள். ஓரளவே எடுத்துச் சொல்வார்கள். குன்றக்குடித் திட்டம் மைய அரசின் பார்வையை ஈர்த்தபோது அடிகள் அருளிய தொடர்,

“தானாகத் தந்தது என்று உந்தீபற”

என்று கூறிப் புன்னகைத்தார்கள்.

அடிகள் சோர்வின்றிச் சிந்திப்பார்கள்; தொடர்ந்து சிந்திப்பார்கள்; முறைப்படுத்தப் பெற்ற சிந்தனையாளர்களையும் தன் வயப்படுத்திவிடும் கூர்த்த சிந்தனையுடையவர்கள். அடிகள் ‘சிந்தனை’ என்ற ஒரு திங்கள் இதழைத் தொடங்கினார்கள். ‘அடிகள்-ஒரு தத்துவம்’ என்ற தலைப்பில் அடிகளைப் பற்றிய - அவர்தம் சிந்தனையோட்டம் பற்றிய திறனாய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். அப்போது அடிகள் எனக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாக வழங்கியருளினார்கள். இன்றும், ஏன் இந்த அணிந்துரையையும் அந்தப் பேனாவால்தான் எழுதுகிறேன். அதில் குன்றக்குடி அடிகளார் என ஆங்கிலத்தில் எழுதப் பெற்றிருக்கும்.

பெங்களுர்த் தமிழ்ச்சங்கத்தில் அடிகளுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப்பெற்றது. ஆண்டு நினைவில்லை, அடிகளாரைப் பற்றிப் பாராட்டிப் பேசுவதற்கு அடிகளின் இயல்பை-சிந்தனையை-தொண்டினை நன்கு தெரிந்த ஒரு பேச்சாளர் வேண்டுமெனக் கேட்டிருந்தார்கள். அப்போது அடிகள், என் பெயரைப் பரிந்துரை செய்தார்கள். யானும் சென்று அடிகளைப் பற்றிப் பாராட்டிப் பேசி வந்தேன். அடிகள்தம் திருவுளத்தில் அடியனைப் பற்றிய ஒரு தெளிந்த எண்ணம் நின்று நிலவியமைக்கு யான் பல பிறப்புகளில் செய்த நற்றவம் ஒன்றே காரணம் என இன்றும் நினைக்கிறேன்.

திருச்சிராப்பள்ளி உறையூரில் வாகீசபக்த ஜனச் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் தலைவனாக யான் இருந்தேன். சற்றொப்ப 35 ஆண்டுக்காலம் அடிகளும் யானும் நெருங்கிப் பணியாற்றினோம். அப்போதுதான் பெரியபுராணத்தில் பட்டிமன்றம் அமைத்தோம். முதலில் அது தோல்வியைத் தான் தந்தது. ஆயினும் மனம் தளராது பெரியபுராணத் தலைப்பையே அமைத்தோம். சமுதாய மறுமலர்ச்சிக்காக இப்படித்தான் தீர்ப்பு அமைப்பது என

கு.VIII.2.