பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10

முன்கூட்டியே முடிவு செய்து அதற்கேற்ப வாதத்தை அமைத்துக்கொள்ளும் முறையைப் பின்பற்றினோம்.

ஒவ்வோர் ஆண்டும் மார்கழி இறுதி ஞாயிற்றுக்கிழமை ஆண்டு விழா நடைபெறும். காலையில் பட்டிமன்றம். மாலையில் திருவாசகம் பற்றி அடிகள் தனிப் பேச்சு நிகழ்த்த வேண்டும் என்று வற்புறுத்துவேன். அடிகள் திருவாசகம் பற்றி உரை நிகழ்த்தும் போது கண்ணீர் மல்க, உடல் குலுங்க, நாத் தழுதழுக்கப் பேசுவார்கள். அத்தகைய பொழிவுகளெல்லாம் இன்று எழுத்துருவம் பெற்று நூல் வடிவமாக வந்திருக்கும் போது அவைகளையெல்லாம் பார்த்து, படித்து ஆனந்தம் கொள்ளும் பேற்றையும் எனக்குத் தமிழ் மாமுனித் தெய்வம் தந்துள்ளமையை எண்ணி மகிழ்கிறேன்.

மாணிக்கவாசகர், திருவாசகத்தேன், திருவாசக உண்மைகள், திருவாசகத்தில் சமுதாய நோக்குகள், ஞானப் பனுவல், பாட்டும் பொருளும், வாழும்நெறி, குழந்தையும் பொற்கிண்ணமும், அழுதால் பெறலாம், வாழாதநெஞ்சம், புலன்களும் பொறிகளும், நினைந்தூட்டும் தாயினும், எல்லாமே இறைவனின் திருக்கோலம், தகைசால் தலைமை, நியாயமே, மாணிக்கவாசகர் கண்ட காட்சி, திருவெம்பாவை-திருப்பள்ளி யெழுச்சி விளக்கம், தாய்போற் கருணையன், பேசு, வாழ், ஞான உழவு, எல்லை கடந்த பொருள், பிழை தவிர்த்தாளும் பெருமான், கொல்லாமை வேண்டும், தேடிப் பெறுவதா?, பரபரக்காதே, குமரகுருபரரின் உயிர்க்கொள்கை, காக்கை விரும்பும் கனி, நற்சொல் எது?, பெரியோரின் செயல், தாயுமான சுவாமிகள், வள்ளலார் நெறி I, II, அருள்மழை, பணி செய்க, உய்வளிக்கும் தெய்வசிகாமணி என முப்பத்தைந்து தலைப்புகளில் அடிகளின் சிந்தனைப் பட்டறையில் உருவாக்கப்பெற்ற வாழ்வியற் பொறிகள்.

சொற்களுக்கு அகராதிப் பொருள் விளக்கம் காண்பது புலவர் தொழில்; நயம் சார்ந்த விளக்கங்களைக் காண்பது இலக்கியச் சிந்தனையாளர்களின் புதுமை; ஆனால் அடிகளோ சொற்களுக்கு வாழ்வியற் பொருள் காணும் உத்தியைக் கையாளுவார்கள். இந்த உத்தியே அடிகளை மக்கள் மன்றத்தில் கொலுவீற்றிருக்கச் செய்து, தமிழ் மாமுனிவராக ஆக்கியது என்றால் மிகையாகாது. எடுத்துக் காட்டாகச் சிலவற்றை எடுத்தாளலாம்.

‘புகுதல்’ என்பது இன்றும் மக்களிடத்தில் பயின்று வரும் எளிய தமிழ்ச்சொல்.