பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

209


என்பதை அறிவதில்லை. மூர்க்கராதலால் சான்றோர் சொல்லும் வார்த்தையைச் செவிகொடுத்துக் கேட்பதில்லை.

பிறவிக்குரிய காரணங்கள் கெட்டால் பிறவியும் கெடும். சித்த விகாரங்கள் சுட்டெரிக்கப்பட்டால் பிறவிக் காடும் அழியும். சின்னத்தனமான காரியங்கள் செய்தல், வெறுப்பனவே செய்தல் கூடாது. சிறுமையும் வெறுமையும் பிறவிக்குக் காரணங்கள். வெறுப்பனவே செய்யும் பிறவி ‘சீமைக் கருவையைப் போல வெட்ட வெட்ட தளிர்க்கும். இழி செயல் செய்வோரின் பிறவி தொடரும். அந்த ஆன்மாக்களின் இச்சையின்றியே தொடரும். பிறவி தொடர முயற்சிகள் வேண்டாம் இறைவனிடத்தில்கூட விண்ணப்பிக்க வேண்டாம். தாமே தொடரும்.

பிறவி நன்றாக அமையவும் இன்பமாக வந்து பொருந்தவும் ஆன்மா, இறைவனிடம் கேட்டுத்தான் அவனுடைய அருளிப்பாட்டுடன்தான் பிறக்க இயலும். ஆதலால், கெட்ட பிறவியை வேரும் வேரடி மண்ணுமாகக் களைய வேண்டும், சீமைக் கருவையைத் தோண்டுவது போல! “பிறவியை வேரறுப்பவன் இறைவன்” என்று திருவாசகம் கூறும்.

பிறவிக்குக் காரணம் பாசம்; அவா. “அவா தவாஅப் பிறப்பினும் வித்து” என்றது வள்ளுவம். இளையான்குடி மாறனார் கீரை பிடுங்கிய காட்சியைப் ‘பாசப் பழிமுதல் பறிப்பார் போல’ என்று சேக்கிழார் கூறினார். பிறவி ஓட வேண்டுமாயின் அல்லது பிறவி இன்பமுடையதாக அமைய வேண்டுமாயின் ஆசைகளை அகற்றுதல்வேண்டும். பாசத்தை விடுதல் வேண்டும். வாழ்க்கையை ஆட்டிப் படைத்து அவலப்படுத்துவன, ஆசாபாசங்கள். இந்த ஆசைக்கும் பாசத்துக்கும் காரணம் அறியாமை. அறியாமை என்பது பலர் கூறுவதுபோல ஒன்றும் தெரியாமை அல்ல. நல்லதைக்